சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் தரமணியில் உள்ளது. இக்கல்லூரியில் ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியேட், ஒலிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், எடிட்டிங், அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய 6 பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு (பேச்சிலர் ஆப் விஷுவல் ஆர்ட்ஸ்) வழங்கப்படுகிறது.
இப்படிப்புகளில் வரும் கல்வி ஆண்டில் (2026-27) சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கையேட்டை www.filminstitute.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை விண்ணப்ப கட்டணம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் ஜூன் 2ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
