தமிழக முதல்வர் விஜய் இம்மாத இறுதியில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்!!

சென்னை: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் இம்மாத இறுதியில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றதும், திருச்சி கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவியை விஜய் ராஜினாமா செய்தார்.

மேலும், தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையாவுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்நிலையில், 17-ஆவது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து மற்ற எம்எல்ஏக்கள் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நாளை முறைப்படி சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் இம்மாத இறுதியில் முதலமைச்சர் விஜய் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களிடம் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் மற்றும் நிதி குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசுத்தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: