பகுதி 1
இடி மழைக்குரிய கடவுள் வழிபாடு இந்தியாவில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் உள்ளது. இங்குள்ள இந்திரனைப்போல் மற்ற நாடுகளிலும் வீரத்துக்கும் இடி மழைக்கும் உரிய கடவுள் வழிபாடு இருந்தது. வேளாண் குடிமக்கள் வாழ்ந்த ஊர்களில் இடி மழைக்குரிய கடவுள் வழிபாடுபரவலாக காணப்பட்டது.
அலெக்சாண்டர்
அலெக்ஸ்சாண்டர் என்ற கிரேக்க மன்னனின் பெயர் அலெக்ஸ் இந்திரா (Alex Endra) எனப் பிரித்து பொருள் காணப்பட வேண்டும் என்பர். ரோமானிய நாட்டைச் சேர்ந்த நாடோடிகளான ரோமர் எனப் படும் மக்கள் இந்திரா (Indra) என்ற தெய்வத்தை வழிபட்டனர்.
மற்ற மதங்களிலும் மழைக்கடவுள் இந்திரன்
இந்தியாவில் மழைக்கடவுள் இந்திரனை சமணர், பௌத்தர் மற்றும் இந்துக்கள் எனப்படும் மூன்று பிரிவினரும் வழிபட்டனர். இவன். தேவர்களின் தலைவனாக போற்றப்பட்டான். தாய்லாந்து நாட்டில் இந்திரனின் ஐராவதம் என்ற வெள்ளை யானை அரசுச் சின்னமாக விளங்குகிறது. இந்திரனை சிவ தர்மேந்திரா என்று அழைக்கின்றனர். சவான், ஜன்மா, திக்ஷா, கேவல ஞானம் மற்றும் நிர்வாணம் ஆகிய ஐந்து நிலைகளை சாகா என்ற பெயரில் பௌத்தர்கள் இந்திரனைக் குறிப்பிடுகின்றனர். புத்தருக்கு திருமுழுக்கு அளித்தவன் இந்திரன் ஆவான். அவனது பெயரை சாகா என்கின்றனர். சாகா என்ற பெயரிலிருந்து தோன்றியது சாக்கியமதம் தோன்றியது. அதனைத் தோற்றுவித்தவர் சாக்கியமுனி என்ற கௌதம புத்தர் ஆவார்.
கிழக்காசிய நாடுகளில் மழைக்கடவுள் வழிபாடு
மழைக் கடவுளான இந்திரனை பௌத்த சமயத்தினர் ஜப்பானில் பெருங்கடவுளாகப் போற்றுகின்றனர். தாயி (thai) என்றால் பெரிய என்பது பொருள். ஜப்பான் மொழியில் இந்திரனை ‘தாயி ஷா கூ தேன்’ என்று அழைக்கின்றனர். சீன மொழியில் இந்திரனை ‘பின் ஈ இன்’ என்பர். கொரியாவில் இந்திரன் ‘நோன் பின்’ என்பர். சோரோஸ்டிரிய சமயத்தார் இந்திரனை தேவா என்றும், சிரியாவில் இந்தா ரா என்றும் இடிமழைக்குரிய கடவுளாகிய இந்திரனை வணங்குகின்றனர்.
மேலைநாட்டு மழைக்கடவுளர்
இந்தியாவில் தேவர்களின் தலைவனான இந்திரன் மேகத்துக்கும் வீரத்திற்கும் கடவுளாக இருப்பதைப் போன்று ஐரோப்பிய நாடுகளிலும் இந்திரனைப் போலவே சில மழைத் தெய்வங்கள் போற்றப்படுகின்றன. ஜெர்மனியில் கிறிஸ்தவம் பரப்பப்படுவது முன்புவரை வணங்கப்பட்டுவந்த பெருந்தெய்வம் ஓடன் என்பதாகும். நோர்ஸ் இனத்தில் மழைதெய்வத்தை ஓட்டின் (Odin) என்கின்றனர்.
ஜெர்மானியரின் ஓடன் அந்நாட்டின் தலைமைக் கடவுளாக வழிபடப்பட்டது. கிராமங்களில் இத்தெய்வம் பற்றிய கதைகள் நிறைய உண்டு. இவர்கள் புதன் கிழமையை ஒடன்ஸ் ஸ்டே (Wodens Day) என்கின்றனர். அதாவது ஓடனின் நாள் ஆகும். இக்கடவுளின் பெயரை லத்தீனில் மாதேஷ் என்பர். இதன் பொருள் தீர்க்கதரிசி, புத்திமான், இனி நடக்கப்போவதை எடுத்துக் கூறும் அறிஞர் என்பனவாகும்.
இதே பொருளில்தான் புதன் என்ற கிரகமும் வழங்குகிறது. புதன் என்றால் புத்தி உடையவன் நிதானமாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன் என்பது பொருளாகும். புதன் என்பதற்கும் புத்தன் என்பதற்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உள்ள வேர்ச்சொல் புத் என்பதாகும். ஸ்வீடன் ஒன்ஸ் டாக் என்றும் நார்வே நாட்டிலும் ஓடிடாஸ் என்றும் என்றும் அழைக்கின்றனர்.
புராணங்களில் இந்திரன்
இந்திரன் குறித்து நிறைய கதைகள் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. இந்திரன் தேவர்களின் தலைவன் அவனுடைய உலகம் இந்திரலோகம். இந்திரன் என்பது ஒரு தேவரைக் குறிக்கும் பெயரல்ல. அது ஒரு பதவி. புராணங்களில் இந்திரனுக்கு நான்கு கைகள் உண்டு. இடி, ஈட்டி, அம்பு மாயவலை ஆகிய நான்கையும் தன் கைகளில் கொண்டிருப்பான். இவனுடைய நகரம் அமராவதி. ஆயுதம் வஜ்ராயுதம்.
இவன் பவனி வரும் யானை ஐராவதம். இவனுக்குரிய குதிரை உச்சைஸ்ரவஸ். இவனுடைய மலை மந்திர மலை ஆகும். இவன் எழுதிய இலக்கண நூல் ஐந்திரம். இடி இவனது கொடி. காமதேனு இவனது பசு, 64 கலைகளில் ஒன்றான மாயாஜாலம் இவனது கலை; நன்னாரி இவனது பாசம். வானவில் இவனது வில், கிழக்கு இந்திரனின் திசையாகும், கேட்டை இவனது நட்சத்திரம் வெண் தோன்றி இந்திரனுக்குரிய மலர். இதை காந்தள் என்றும் சொல்வர். பொதிய மலையில் கிடைக்கும் மஞ்சள் நிற சந்தனம் இந்திரனுக்குப் பிரியமான பொருளாகும்.
இந்திரனுக்கு உரிய தாவரம் பிரண்டை அல்லது முடக்கத்தான் என்பர். அவனுடைய வாகனம் மேகம். அவனுடைய மனைவி இந்திராணி. மகன்கள் அர்ச்சுனன், ஜெயந்தன், வாலி ஆகியோர். அவனுடைய மேகங்கள் எண்ணிக்கையில் ஏழு, அவனது அணி சிந்தாமணி எனப்பட்டது. அவனை அமராவதியோன், சதமகன், கோபதி, போகி, வின், முழு, தாலி வாசவன், வானவன், கௌசிகன், வெள்ளைவாரணன், பொன் நகர் செல்வன், வேந்தன் சுவர், கண் புரந்தரன், சங்கீத, அந்தணன், பாக சாதனன் என்று பல பெயர்களால் அழைத்தனர்.
ஆற்றங்கரை நிலமும் இந்திரனும்
இந்திரனை வேந்தன் என்ற பெயரில் குறிப்பிடுவதும் உண்டு. இவனை மருதநிலத் தெய்வமாகப் போற்றுவதால் மருதக் கிழவன் என்றும் அழைப்பர். தொல்காப்பியம் மருத நிலத்திற்கு தலைவனாக வேந்தன் என்பவனை சுட்ட பதினோராம் நூற்றாண்டிற்குப் பிறகு வேந்தனுக்குப் பதிலாக இந்திரன் இடம்பெற்றான்.
இந்திரன் பதவிக்கு ஆசைப்பட்டு
தன் அண்ணன் பத்மாசுரனை இந்திரனாக்க ஆசைப்பட்ட அவனது தங்கை அயோமுகி மூங்கில்காட்டில் ஒளிந்திருந்த இந்திராணியை கையைப் பிடித்து இழுத்து வர முயன்றாள். அப்போது இந்திராணிக்கு காவலாக இருந்த காலன் அயோமுகியின் கையை வெட்டி விட்டான் என்ற கதை இந்திராணியின் பெருமையை எடுத்துரைக்கும்.
இந்திரனுக்கு ஒரு கோயில்
இந்து சமயத்தில் ரிக்வேதத்தில் வீட்டின் மழை கொண்டுவரும் தெய்வமாகப் போற்றப்பட்ட இந்திரனுக்குச் தமிழகத்தில் சில கோவில்களே உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவாழ் மலைக்குப் பின்புறத்தில் ஒரே ஒரு கோயில் தேவேந்திரனுக்கு இன்றும் இருப்பதை காண்கிறோம். இக்கோவில் ஒரு குகைக்கோவிலாக இருப்பதால் இதனை தேவேந்திரன் பொத்தை என்று அழைக்கின்றனர்.
இக்கோவில் தரைமட்டத்திலிருந்து 360 அடி உயரத்தில் காணப்படுகிறது. குகைக்குள் சிற்பமாக இந்திரன் கைகூப்பி நிற்கின்றான். அவனும் அவனுடைய இரண்டு கரங்கள் கைகூப்பி வணங்கிய நிலையில் உள்ளன. சிவவாக்கியர், சித்தர், பார்வதி அம்மன் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்திரன் நிற்கும் திசையிலிருந்து நோக்கினால் தாணுமாலய சுவாமி கோபுரம் தெரிகின்றது. எனவே இந்திரன் இங்கிருந்து கோவிலில் இருக்கும் ஈஸ்வரனை தரிசிப்பதாகிறது.
வெள்ளை யானை இங்குத் தனது தந்தத்தால் தரையில் குத்தி நதியை உருவாக்கிற்று. அதுவே கோட்டாறு (கோடு என்றால் தந்தம்) எனப்பட்டது. சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவிலிலும் இந்திரன் இரவில் வந்து சிவ வழிபாடு செய்கிறான் என்பதனால் இரவு பூசை செய்த பூசாரி மறுநாள் காலை பூசைக்கு வரமாட்டார். வேறொருவரை நியமித்துள்ளனர்.
(தொடரும்)
முனைவர் செ. ராஜேஸ்வரி
