சென்னை: அதிமுக-வில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் அது சட்டமன்றத்திலும் எதிரொலித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக மூத்த உறுப்பினர்கள் போர் கொடி தூக்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதிமுக எம்எல்ஏ-க்கள் இரு அணிகளாக பிரிந்து தனித்தனியே சட்டமன்றம் வந்தது அக்கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவை உறுதி செய்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏ-வாக உறுதிமொழி ஏற்கும் போது ஒருசில அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே மேசையை தட்டி வரவேற்ற நிலையில், எஸ்.பி.வேலுமணி உறுதிமொழி ஏற்கும் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மேசையை தட்டி வரவேற்றனர். 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு, எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதென்ன பிரமாதம், இத விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு.. என்கிற ரீதியில் அதிமுக பிளவு குறித்து வெளியாகி இருக்கும் மற்றொரு தகவல் அதிமுக தொண்டர்களை மட்டுமல்லாது, தீவிர அதிமுக வாக்காளர்கள் மற்றும் மாற்றம் தருவோம் என்று முழங்கி ஆட்சியை பிடித்துள்ள தவெக-வை நம்பி வாக்களித்த நடுநிலை வாக்காளர்கள் என பல தரப்பினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-வை நேரடியாக ஆதரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தங்களின் அரசியல் லாபத்திற்காக அவர்கள் இந்த “ஒருமித்த முடிவை” எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 8 அமைச்சர் பதவிகளையும் அதிமுக தரப்பு விஜய்யிடம் கோர திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மக்களின் நினைவிற்கு…
இரு திராவிட கட்சிகளும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதாக பிரச்சாரத்திற்காக வந்த “சில மேடைகளில்” விஜய் பேசியது நினைவிருக்கலாம். மாற்றங்கள் என்பது மக்கள் திட்டங்கள், மக்கள் பாதுகாப்பு என்பதில் மட்டுமல்ல, அரசியல் அறம் சார்ந்து நேர்மையான ஒன்றாக இருக்க வேண்டும், அது தான் நியாயமும் கூட. ஆனால் தீயசக்தி என்று பேசிய திமுக கூட்டணி கட்சிகளிடமே ஆதரவு கேட்டு பதவியில் அமர்ந்துள்ள விஜய்யிடம், அரசியல் அறத்தை எதிர்பார்க்க முடியுமா என்ன? விமர்சித்த கட்சிகளிடமே ஆதரவு கேட்டு, அவர்கள் தயவில் ஆட்சியமைத்திருக்கும் விஜய், மாற்றம் எதிர்பார்த்த மக்களுக்கு அதிமுக-வை அரவணைத்து மற்றொரு “புரட்சிகர அரசியல் மாற்றத்தை” தர போகிறாரா என்று சிலநாட்களில் தெரிந்து விடும்.
