இந்தியாவுக்கு எதிரான யுத்தம் இரு சித்தாந்தங்களின் போர்: பாக். ராணுவ தளபதி பேச்சு

 

இஸ்லாமாபாத்: கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இந்தியா உடனான மோதலை இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர் என பாகிஸ்தான் முப்படை தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் கூறி உள்ளார். காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கடந்த ஆண்டு மே 7ம் தேதி தொடங்கியது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத தளங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு, சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடந்தது. இப்போரின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டின் முப்படை தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் பங்கேற்று பேசியதாவது: கடந்த ஆண்டு மே 7ம் தேதி இரவு முதல் மே 10ம் தேதி வரையிலும் இந்தியா, பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்தியத்தை மீறியது.

இதற்கு பாகிஸ்தான் முழுமையான தேசிய ஒற்றுமையுடனும் ராணுவ பலத்துடனும் பதிலடி கொடுத்தது. மார்க்கா இ ஹக் (இரு நாட்டு போருக்கு பாகிஸ்தான் சூட்டியிருக்கும் பெயர்) என்பது இரு நாடுகளுக்கோ அல்லது ராணுவங்களுக்கோ இடையே நடைபெற்ற வழக்கமான போர் மட்டுமல்ல, உண்மையில் அது இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான தீர்க்கமான போர். அந்த மோதலின் போது பாகிஸ்தான் 26 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தியா, அமெரிக்கா மூலமாக போர் நிறுத்தத்தை கோரியதால் பாகிஸ்தான் அமைதியின் நலன் கருதி அதற்கு ஒப்புக் கொண்டது. எதிர்கால போர்கள் அவற்றின் பன்முகத் தன்மையின் காரணமாக மாறுபட்டதாக இருக்கும். அத்தகைய மோதல்களை எதிர்கொள்ள பாகிஸ்தான் தயாராகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: