வாஷிங்டன்: வாஷிங்டனில் நடந்த அமெரிக்கா-இந்தியா செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்ப மன்ற கலந்துரையாடலில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா பேசியதாவது: அணுசக்தி திட்டங்களில் பயன்படுத்தப்படும் அணுக்கரு இணைவு தொழில்நுட்பம் அமெரிக்கா-இந்தியா இடையேயான முன்னணி ஒத்துழைப்பு துறைகளில் குறிப்பிடத்தக்கது. பிரான்சில் அணுக்கரு இணைவு உலையை அமைப்பதற்கான சர்வதேச ஆராய்ச்சி பரிசோதனையில் இந்தியாவும் அமெரிக்காவும் பங்கேற்றுள்ளன.
அணுசக்தி, ஏஐ, குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவை இரு நாடுகளின் ஒத்துழைப்பில் முன்னணி துறைகளாக உள்ளன. அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, செயற்கை நுண்ணறிவுடன் இணைத்து, குவாண்டம் முன்னேற்றத்தின் மூலம், இன்னும் சில ஆண்டுகளில் குவாண்டம் கணினித்திறன், அணுக்கரு இணைவில் புதிய கணினித் திறன்களை கொண்டு வரும் நிலைக்கு நம்மை இட்டுச் சென்றால் அது மிகுந்த உற்சாகமான ஒன்றாக அமையக் கூடும். இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மையில் உயிரிமருந்துகள் துறையும் முக்கியமான முன்னுரிமைப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
