தவெக அளித்த கடிதம் போலியானதா? அமமுக எம்எல்ஏ கையெழுத்திட்ட அசல் கடிதம் எங்கே? விஜய் ஆட்சி அமைத்தால் பேரழிவு: டிடிவி.தினகரன் தாக்கு

 

சென்னை: தவெகவுக்கு அமமுக எம்எல்ஏ ஆதரவு அளிப்பதாக ஆளுநரிடம் வழங்கப்பட்ட கடிதம் மோசடியானது என டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார். விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வென்றது. மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இந்நிலை யில், காங்கிரஸ் 5, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 2 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், அமமுக மன்னார்குடி எம்எல்ஏ காமராஜிடம் தவெகவினர் ஆசை வார்த்தை கூறி அவரைத் தவெக நிர்வாகிகள் கடத்திச் சென்றுள்ளதாகப் புகார் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமமுக எம்எல்ஏ காமராஜ், தவெகவுக்கு ஆதரவு தருவதாகக் கடிதம் கொடுத்ததாகவும், அந்தக் கடிதத்தை ஆளுநரிடம் விஜய் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தான் ஏற்கனவே 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அதையும் சேர்த்து தனக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக விஜய் ஆளுநரிடம் தெரிவித்தார். மேலும் தவெக தரப்பில் இருந்து அமமுக எம்எல்ஏ காமராஜை கடத்திச் சென்றதாகத் தகவல் வெளியான நிலையில், நேற்று முன் தினம் ஆளுநர் மாளிகைக்கு வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கவர்னரைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க அமமுக எம்எல்ஏ காமராஜின் ஒரிஜினல் ஆதரவுக் கடிதத்தை கவர்னரிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து “எங்கள் எம்எல்ஏவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை” என அமமுக பொதுச் செயலாளர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஆளுநர் மாளிகைக்கு அமமுக எம்எல்ஏ காமராஜ் வந்தார். தொடர்ந்து டிடிவி தினகரனும் அங்கு வந்து இருவரும் சேர்ந்து ஆளுநரைச் சந்தித்து புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக சென்னை அடையாறில் உள்ள அமமுக அலுவலகத்தில் அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ளதாக வீடியோ இருக்கிறது. அதில் அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாக தன் சுய நினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதும் வீடியோ காட்சிகள் உள்ளன.

இது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஒப்புதலுடன் அவர் தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியிருந்தார். அவர் கடிதம் எழுதவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது. இவை எல்லாம் மறைத்து டிடிவி தினகரன் பொய்யான தகவலை கூறி வருகிறார். தவெக யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவை இல்லை என்று தெரிவித்துள்ளது. இதில் என்ன திமிரு மற்றும் வன்மம் உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.

அது உண்மையான வீடியோ என்றால் வெளியிட வேண்டியதுதானே? எம்.எல்.ஏ. காமராஜ் ஆதரவு அளித்த அசல் கடிதம் எங்கே? தவெக ஆளுநரிடம் அளித்த கடிதத்தில் அமமுக ஒன்று உள்ளது என டிவி பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நாங்கள் இபிஎஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர வாய்ப்பு இருந்தால் அவர்களுக்கு ஆதரவு அளிக்க என்னுடைய கையெழுத்து மற்றும் அவருடைய கையெழுத்தும் போடப்பட்ட ஒரு கடிதம் வாங்கி இருந்தேன். அதைத்தான் நேற்று ஆளுநரிடம் அளித்தேன். எழுதிக் கொடுத்த வீடியோவை யார் எடுத்தார்கள்? விஜய் எடுத்தாரா, ஆனந்த் எடுத்தாரா, ஆதவ் எடுத்தாரா, செங்கோட்டையன் எடுத்தாரா? யார் எடுத்தார்கள் என்று சொல்ல வேண்டும்.

முழு வீடியோ கொடுங்கள். எங்கு உட்கார்ந்து அவர் கையெழுத்து போட்டார் என்று எல்லாம் தெரிவிக்க வேண்டும். அவர் ஆதரவு என்றால் இவரை அழைத்துச் சென்று ஆளுநரிடம் காட்ட வேண்டியதுதானே? விஜய் கட்சி ஆதரவுடன் நாங்கள் மன்னார்குடியில் வெற்றி பெற்றோமா? என்னுடைய ஒப்புதலுடன் கொடுக்கிறார் என்றால் என்ன சாட்சி உள்ளது? என்னை பயமுறுத்திப் பார்க்கிறார்கள். எங்கள் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.

அதிமுகவிற்கு வாய்ப்பு இருந்தால் கடிதம் கொடுக்க வேண்டும் என்பதால் அவரிடம் கையெழுத்து வாங்கி வைத்தேன். இந்த தகவல் வந்த உடன் ஆளுநரிடம் அனுமதி பெற்று நாங்கள் கையெழுத்து வாங்கிய கடிதத்தை அவரிடம் கொடுத்தோம். தவெக சார்பில் கொடுத்தால் அசல் கடிதம் கொடுக்க வேண்டும். யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்? அவர்களுக்குள்ளேயே ஏமாற்றிக் கொள்ளலாம். தமிழ்நாடு மக்களை ஏமாற்ற முடியாது. பதில் சொல்ல வேண்டியுள்ளது. எங்களுக்கு விஜய் யார்? மாமாவா, மச்சானா? இல்லை அவருடன் பழக்கமா? அவருக்கு ஆதரவு என்றால் காமராஜ் கிளம்பிப் போயிருக்கலாம்.

அப்படி எதுவும் இல்லை. ஆளுநரிடம் ஒரு கடிதம் கொடுத்துள்ளனர். அசல் கேட்டுள்ளார், தருகிறோம் என்று ஓடி வந்துள்ளார்கள். பெரிய ஹீரோவாக இருக்கலாம். 108 சீட் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் நாங்கள் 30 ஆண்டுகளாக எல்லாவற்றையும் பார்த்திருக்கிறோம். பல ஆட்சி, சிஎம், தாக்குதல்கள், ரெய்டுகள், விசாரணைகள் எல்லாம் பார்த்திருக்கிறோம். உங்களைப் போன்று ஓடி ஒளியவில்லை.

முதல்வராகி ஊழலை ஒழிக்கப் போறீங்க என்று சொல்கிறார்கள். ஆனால் அதற்கு போலித்தனம் செய்கிறார். முழு வீடியோ தர வேண்டும். அப்போதுதான் அது உண்மையா அல்லது ஏஐ வேலையா என்று தெரியவரும். அந்த வீடியோ ஒரு போலி, ஏஐ போன்று பல உள்ளன. அது போன்றதுதான் இதுவும். அப்படி அந்த வீடியோ உண்மை என்றால் அவர்கள் பேரம் பேசியிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

அப்படி என்றால் என்ன பேரம் அது? குதிரை பேரம் நடத்தத்தான் போலி கடிதத்தை கொடுத்துள்ளனர். விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்திற்கு அது பேரழிவை ஏற்படுத்தும். ஆட்சி அமைக்க எத்தனை போலித்தனம், எத்தனை 420 வேலைகளை செய்கிறார். எனவே அசல் கடிதத்தை விஜய் வெளியிட வேண்டும். இது உண்மை என்றால் என்ன பேரம் பேசினார்கள் என்று தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் இரவு நிருபர்களிடம் கூறியதாவது: என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. நான் புதுச்சேரியில்தான் இருந்தேன். நான் அதிமுகவுக்குத்தான் ஆதரவு அளித்தேன். என்னுடைய மொபைல் காணவில்லை. அதனால்தான் டிடிவி தினகரன் அழைப்பை எடுக்க முடியவில்லை. என் பெயரில் கடிதம் வந்த உடன் அழைத்துக் கேட்டனர். அதற்குத்தான் நேரில் வருகிறேன் என்று கூறிவிட்டு வழக்கறிஞருடன் வந்து ஆளுநரிடம் புகார் அளித்தேன். என்னிடம் 3 செல்போன் உள்ளது. அதில் ஒன்றில் ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்தது. அதில் இருப்பது என்னுடைய கையெழுத்து இல்லை. என்னைப் போல யாரோ போட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

* அமமுக சார்பில் ஆளுநரிடம் கொடுத்த புகார் கடிதம்

ஆளுநரிடம் காமராஜ் அளித்த புகார் கடிதத்தில், ‘‘நான் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஆவேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். நான் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததாகக் கூறி ஒரு கடிதம் வாட்ஸ்அப்பில் பரப்பப்படுகிறது. நான் அத்தகைய எந்த ஆதரவையும் அளிக்கவில்லை. அந்தக் கடிதம் எனது அறிவின்றி பரப்பப்படுகிறது.

எனது கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் நான் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமைக்க ஆதரவு அளித்துள்ளோம். ஆகையால், எனது ஆதரவு டி.டி.வி. தினகரன் அளிக்கப்பட்ட கடிதம் மூலமாக மட்டுமே வழங்கப்பட்டது என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதே நிலைப்பாட்டிலேயே நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன்’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: