கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 207 இடங்களில் வெற்றி பெற்று பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் சுவேந்து அதிகாரி தனது பாரம்பரிய தொகுதியான நந்திகிராம் தவிர, பவானிப்பூர் தொகுதியிலும் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மொத்தம் 207 இடங்களை கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியான பிறகு, வட 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சுவேந்து அதிகாரியின் நேர்முக உதவியாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது போன்ற வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து கொல்கத்தா முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று புதிய அரசு பதவியேற்பு விழா கோலாகலமாக நடந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் திலீப் கோஷ், அக்னிமித்ரா பால், நிசித் பிரமாணிக், அசோக் கீர்த்தனியா மற்றும் பழங்குடியின மக்களின் பிரதிநிதியான சுதிராம் துடு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்த விழாவில் பிரதமர் மோடி திறந்த ஜீப்பில் வந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அவருடன் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பல்வேறு மாநில பாஜக முதல்வர்கள் பங்கேற்றனர்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் சுவேந்து அதிகாரி தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது அவர், ‘முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்கள் குறித்து விசாரிக்க நீதி ஆணையம் அமைக்கப்படும். பெண்களுக்கு மாதம் 3,000 ரூபாய் வழங்கும் அன்னபூர்ணா பண்டார் திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலத்தில் நிலவிய பயத்தின் காலம் முடிந்து நம்பிக்கையின் காலம் பிறந்துள்ளது’ என்று உறுதி அளித்தார். விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கு வங்காள கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் 20 இடங்களில் ஜல்முரி சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. 15 ஆண்டுகால மம்தா பானர்ஜி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாஜக தனது முதல் ஆட்சியை மேற்கு வங்கத்தில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
