அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஆன்லைன் மாணவர் சேர்க்கைக்கு உதவி மையத்தை நேரில் அணுகலாம்

பெரம்பலூர், மே 8: வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027ம் கல்வி ஆண்டுக்கான ஆன் லைன் மாணவர் சேர்க்கைக்கு “மாணவர் சேர்க்கை உதவி மையத்தை” அணுகலாம் என்று கல்லூரி முதல்வர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,
பெரம்பலூர் -ஆத்தூர் சாலையில், வேப்பந்தட்டை- கிருஷ்ணாபுரம் இடையே வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் நடப்பு 2026 – 2027 ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மே-7ம்தேதி முதல் வருகிற 29ம்தேதி வரை ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலைப் பட்ட வகுப்புகளாக பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பி.காம், பிபிஏ, இளம்அறிவியல் பட்ட வகுப்புகளாக பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி வேதியியல், பிஎஸ்சி தாவரவியல், பிஎஸ்சி விலங்கியல், பிஎஸ்சி உயிர் தொழில்நுட்பவியல் ஆகிய இளநிலை பட்ட வகுப்புகள் உள்ளன. இவற்றில் தமிழ், ஆங்கிலம், பிகாம், பிபிஏ, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 5- பட்ட வகுப்புகளுக்கு தலா 60 மாணவ,மாணவியர் என 300 பேர்களுக்கும், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிர் தொழில் நுட்பவியல் ஆகிய 5 பட்ட வகுப்புகளுக்கு தலா 40 மாணவ,மாணவியர் என 200 பேர்களுக்கும் என மொத்தம் 500 மாணவ மாணவியருக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது.

www.tngasa.in என்ற முகவரியில் ஆன்லைன் முறையில் நடைபெறும் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக அரசு கல்லூரி வளாகத்தில் AFC எனப்படும் மாணவர் சேர்க்கை உதவி மையம் (ADMISSION FACILITATION CENTRE) அமைக்கப் பட்டுள்ளது. அரசு கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக வருகிற 29ம் தேதி வரை தினமும் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இந்த மையம் இயங்கி வரும். மாணவர் சேர்க்கை தொடர்பாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் கல்லூரி முதல்வர் முனைவர் இராமராஜ் என்பவரை 8428103099 என்ற எண்ணிலும், மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் இராமர் என்பவரை 8870530952 என்ற எண்ணிலும், பேராசிரியர் மூர்த்தி என்பவரை 9677963107 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதில் மாணவர் சேர்க்கைக்கு இதர பிரிவுகளை சேர்ந்த மாணவ மாணவியருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 48-ம், பதிவு கட்டணமாக ரூபாய் 2-ம் என மொத்தம் 50 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி.எஸ்டி மாணவ மாணவியருக்கு ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும்.

வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவியருக்கு எஸ்சி மற்றும் எஸ்டி நலத் துறை உதவித்தொகை, பிசி மற்றும் எம்பிசி, டிஎன்சி நலத்துறை உதவித்தொகை, சிறுபான்மையினர் நலத் துறை உதவித்தொகை, பெற்றுத் தரப்படும். வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், இளைஞர் செஞ்சுருவ சங்கம், உடற்திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. இந்த வசதி வாய்ப்புகளைப் பெற்று, உயர் கல்வியில் பயின்று, வேலைவாய்ப்பினை பெற்று, வாழ்வில் உன்னத நிலையை அடைய வேப்பந் தட்டை அரசு கல்லூரியில் சேர்ந்து பயில மாணவர்கள் விரைந்து தங்கள் சேர்க்கையை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: