திமுக அரசின் போதை தடுப்பு நடவடிக்கை பாராட்டத்தக்கவை: ஐகோர்ட் கிளை நீதிபதி புகழாரம்

மதுரை: போதைப்பொருளை கட்டுப்படுத்த முந்தைய திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற பலர், தங்களது தண்டனையை இடைநிறுத்தம் செய்து, ஜாமீனில் விடுவிக்கக் கோரி தனித்தனியாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா கடத்தல் உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் பதிவாகும் வழக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் இந்த 3 மாவட்டங்களில் மட்டும் பதிவாவது கவனிக்கத்தக்கது. இவை ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பைக் காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைப்பிடித்து வருவதாகவும், தமிழ்நாட்டில் இருந்து போதைப்பொருட்களை ஒழிக்க அரசு உறுதியுடன் இருப்பதாகவும், போதைப்பொருள் விழிப்புணர்வு கையேடு வெளியீடு, மற்றும் போதைப்பொருட்களை அழிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவது குறித்து டிஜிபி மற்றும் உள்துறை அமைச்சகம் பல்வேறு சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் (முந்தைய திமுக அரசு) இந்த சிறப்பான நடவடிக்கையை நீதிமன்றம் பாராட்டுகிறது. இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது நிறுத்தப்பட்டாலும், இங்கிருந்த குற்றவாளிகள் தற்போது ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்களில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து கஞ்சா பயிரிட்டு, அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வருவது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் ஒழிப்புக்காக உருவாக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவை விட, உள்ளூர் போலீசாரே போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாக அதிக வழக்குகளைப் பதிவு செய்கின்றனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தமிழ்நாடு முழுவதும் 12 டிஎஸ்பிக்கள், 16 இன்ஸ்பெக்டர்கள் என மிக குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகளே உள்ளனர். எனவே, போதைப்பொருள் தடுப்பு பிரிவில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சைபர் கிரைம் செல்களை உருவாக்கி, போதை பொருள் கடத்தல்காரர்களின் ஆன்லைன் தொடர்புகளைக் கண்காணிக்க வேண்டும்.

பேருந்துகள் மற்றும் ரயில்களில் அவ்வப்போது சோதனைகளை நடத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை உதவியைப் பயன்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும். போதைப்பொருள் வழக்குகளில் போலீசார் கைது மற்றும் கஞ்சா பறிமுதல் செய்வதிலேயே கவனம் செலுத்துகிறார்கள், ஆனால் கஞ்சா எங்கிருந்து வருகிறது, அதன் பின்னால் உள்ள பணப்பரிவர்த்தனை வலையமைப்பு என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதில்லை. எனவே, இனிவரும் அனைத்து போதை பொருள் தடுப்பு வழக்குகளிலும் குற்றவாளிகளின் சொத்துக்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஏஓக்கள் மூலம் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநில அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். வெறும் கைதுகளால் மட்டும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்துவிட முடியாது, கடத்தல் கும்பலின் பொருளாதார அடித்தளத்தைத் தகர்த்தால் மட்டுமே போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க முடியும் எனக்கூறி கடுமையான நிபந்தனைகளுடன் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

  • போதைப்பொருள் ஒழிப்புக்காக உருவாக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவை விட, உள்ளூர் போலீசாரே போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாக அதிக வழக்குகளைப் பதிவு செய்கின்றனர்.
  • தற்போது ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்களில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து கஞ்சா பயிரிட்டு, அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வருவது தெரியவந்துள்ளது.
  • விஏஓக்கள் மூலம் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநில அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

Related Stories: