தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து

ஊட்டி,மார்ச் 1:சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இதில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து குறைகள், கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதியன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.  அன்று தினம் முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது. இதன் காரணமாக ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது, 2021ம் ஆண்டு தமிழக சட்ட பேரவைக்கான பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் நடைமுறைகள் முடிவுற்று, தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்படும் வரை மாவட்ட கலெக்டரால் வாரந்தோறும் திங்கள்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: