விடுமுறை நாளில் சுற்றுலா வந்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை, மகன், மகள் பரிதாப பலி

பல்லாவரம், மார்ச் 1: குன்றத்தூர் அடுத்த புதுவட்டாரம், திருவள்ளுவர் நகர், கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் உஸ்மான் (39),  தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் அப்சனா (11), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தாள். மகன் சுகில் (7), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், உஸ்மான் தனது மகன், மகளை அழைத்துக்கொண்டு, செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றார். அங்கு, ஏரியின் 6வது கண் மதகு அருகே நின்று ஏரியில் கடல்போல் இருக்கும் நீரை பார்த்து ரசித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மகள் அப்சனா தவறி ஏரிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. அவளை காப்பாற்ற தம்பி சுகில் ஏரியில் குதித்துள்ளான். இருவரும் நீச்சல் தெரியாமல் நீரில் தத்தளித்ததை கண்ட உஸ்மான், உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். ஆனால், யாரும் வராததால், மகன், மகளை காப்பாற்ற அவரும் ஏரியில் குதித்துள்ளார்.

மூவருக்கும் நீச்சல் தெரியாததால் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ஏரிக்குள் இறங்கி உஸ்மானை மீட்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து பூந்தமல்லி தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஏரிக்குள்  இறங்கி ரப்பர் படகு மற்றும் வலை மூலம் நீண்ட நேரம் தேடி அப்சனா மற்றும் சுகிலை சடலமாக  மீட்டனர். தகவலறிந்த குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உஸ்மான் மற்றும் அப்சனா, சுகில் ஆகிேயாரது சடலங்களை  கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உஸ்மான் அவரது குழந்தைகளோடு, உறவினரின் குழந்தைகளையும் அங்கு அழைத்து வந்ததும், அவர்களை மேலே நிறுத்தி விட்டு, தனது மகன், மகளுடன் மட்டும் ஏரிக்குள் இறங்கியதும், அப்போது, தவறி ஏரிக்குள் விழுந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: