ஸ்டாலின் தோற்றது அண்ணாவே தோற்றது போல் உள்ளது திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்காது: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்பு வைகோ பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணி 2வது இடத்தை பிடித்தது. இதை தொடர்ந்து, அண்ணா அறிவாலயம் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

இதை தொடர்ந்து வெளியில் வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த போது நாட்டில் இருக்கும் பிற மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டும் வகையில் எண்ணற்ற அரிய சாதனைகளை திட்டங்களாக நிறைவேற்றி தமிழகத்தை முன்மாதிரியாக விளங்க செய்தார். மகளிருக்கு, பள்ளி குழந்தைகளுக்கு, தாய்மார்களுக்கு என பல தரப்பினருக்கும் நன்மைகளை அளிக்க கூடிய பல திட்டங்களை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி செயல்படுத்தி காட்டியுள்ளார். தற்போது வெற்றி பெற்றிருக்கின்ற தவெக கட்சி அமைச்சரவை அமைகின்ற காலகட்டத்தில் இவை அனைத்தையும் சிறு தடையின்றி, தொய்வில்லாமல் தொடர வேண்டிய கடமை இருக்கிறது. திமுக அரசு செயல்படுத்தி வந்த ஒரு திட்டத்தை கூட விட்டு விடாமல், நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் இருப்பதால் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற முடியவில்லை. அதேபோன்று, பல நலத்திட்டங்களை செயல்படுத்திய போதும் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் இது ஜனநாயகத்தின் தீர்ப்பு, மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். திமுக, ஆயிரம் காலத்து பயிராக இந்த மண்ணில் தழைக்க அரும்பெரும் தியாகங்களால் கட்டப்பட்டு எழுப்பப்பட்ட திராவிட இயக்க கோட்டைக்கு முனைமுகமாக இருக்கக்கூடியது. இந்த தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற முடியவில்லை. கடந்த 1962ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், 50 இடங்களில் திமுக வெற்றி பெற்றபோது, காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணா தோல்வி அடைந்தார்.

இதனால், அந்த வெற்றியை தாங்கள் கொண்டாடவில்லை. அதுபோன்ற நிலைமை தான் இப்போதும் உள்ளது. திமுக தலைவர் அருபெரும் சாதனைகளை திட்டங்களாக அறிவித்து, ஒரு எடுத்துக்காட்டான அரசாங்கத்தை நடத்தியவர் மு.க.ஸ்டாலின். அவர் வெற்றி பெறாதது, 1962ம் ஆண்டு தேர்தல் மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் ஜனநாயகத்தின் தீர்ப்பு என்பது மக்களின் தீர்ப்பு. அதை நாங்கள் மதிக்கிறோம். தவெக ஆட்சியமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. எங்களிடம் அவர்கள் ஆதரவு கேட்க வரவே மாட்டார்கள். நாங்கள் மிகவும் உறுதிப்பாட்டோடு திமுக கூட்டணியில் நீடிக்கிறோம். அதேபோன்று திமுக கூட்டணி கட்சிகள் எப்போதும் வேறு கட்சியை ஆதரிக்காது என்பது எனது திடமான நம்பிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: