சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 11 தொகுதிகளில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் என 193 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். நேற்று நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கையில் 7 தொகுதிகளில் அதிமுகவும், 4 தொகுதிகளில் தவெகவும் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் செலுத்தும் டெபாசிட் தொகையை பெற, மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்கினை பெற வேண்டும். அவ்வாறு பெறாத வேட்பாளர்கள், டெபாசிட் இழப்பார்கள். அதன்படி சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் போட்டியிட்ட 193 வேட்பாளர்களில் 33 பேர் மட்டுமே தங்களது டெபாசிட்டை தக்கவைத்துள்ளனர்.
அதேசமயம், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வீரப்பனின் மகள் வித்யா வீரப்பன் (மேட்டூர்) உள்ளிட்ட 11 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இதேபோல், சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட அருள் உள்ளிட்ட ராமதாஸின் பாமகவைச் சேர்ந்த வேட்பாளர்களும் டெபாசிட் பெறவில்லை. சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லியில் 10 பேர், ஆத்தூரில் 12 பேர், ஏற்காட்டில் 10 பேர், ஓமலூரில் 12 பேர், மேட்டூரில் 15 பேர், இடைப்பாடியில் 12 பேர், சங்ககிரியில் 17, சேலம் வடக்கு தொகுதியில் 11 பேர், சேலம் மேற்கு ெதாகுதியில் 28 பேர், சேலம் தெற்கு தொகுதியில் 16 பேர் மற்றும் வீரபாண்டியில் 17 என மாவட்டம் முழுவதும் 160 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்து உள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 132 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில் திமுக, தவெக, பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் 18 பேர் தவிர, 114 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
