சென்னை: சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் நகர்ப்புற தொகுதிகளில் 47 சதவீத வாக்குகளை அள்ளியது தவெக. 18 முதல் 39 வயது வரையிலான வாக்குகள் முழுமையாக தவெகவிற்கு கிடைத்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தவெக 107 இடங்களை கைப்பற்றியது. குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் அபரிமிதமான வெற்றியைப் பதிவு செய்து, அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற மற்றும் இளைஞர்களின் வாக்குகளைப் பெருமளவில் கவர்ந்து, முக்கிய இடங்களில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தவெகவுக்கு வெற்றியை அள்ளிக்கொடுத்த முக்கிய நகர்ப்புற பகுதிகளான சென்னை மண்டலத்தில் உள்ள 16 தொகுதிகளில் துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி என 2 தொகுதிகளை தவிர்த்து 14 தொகுதிகளை தவெக வாரி சுருட்டி உள்ளது.
அதாவது எழும்பூர், ஆயிரம் விளக்கு, ராயபுரம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, திரு.வி.க.நகர், கொளத்தூர், அண்ணா நகர், விருகம்பாக்கம், மதுரவாயல், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம் திருவள்ளூர் நகர்ப்புற தொகுதிகள் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை பொன்னேரி (தனி), கும்மிடிப்பூண்டி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், பூந்தமல்லி (தனி), மாதவரம். செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர், திருப்போரூரில் தவெக வெற்றி வாகை சூடியுள்ளது.
முக்கிய மாநகராட்சி நகர்ப்புற தொகுதிகள் கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், சூலூரில் வெற்றி பெற்றுள்ளனர். மதுரையை பொறுத்தவரை மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், சோழவந்தான் வெற்றி பெற்றுள்ளது. இதே போல திருச்சி, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நகரங்களில் தவெக வெற்றி வாகை சூடியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நகர்ப்புறங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இளைஞர்களின் பேராதரவு, அதாவது 18 முதல் 39 வயது வரையிலான இளைய தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் தவெகவிற்கு 35% வாக்கு வங்கி கிடைத்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய பூத் மட்டத்திலான களப்பணியைத் தாண்டி, சமூக ஊடகங்கள் மற்றும் ரசிகர் மன்றங்கள் வழியாக தவெக மேற்கொண்ட டிஜிட்டல் பிரசாரம் நகர்ப்புற வாக்காளர்களை எளிதாகச் சென்றடைந்தது. பல தசாப்தங்களாக திமுக மற்றும் அதிமுக இடையே மாறி மாறி நிலவிய அரசியலில் இருந்து விலகி, ஒரு புதிய மாற்றத்தை நகர்ப்புற வாக்காளர்கள் விரும்பியது தவெகவிற்கு சாதகமாக அமைந்தது. அரசு சேவைகளை காலக்கெடுவிற்குள் வழங்குதல் மற்றும் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல் போன்ற வாக்குறுதிகள் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரை ஈர்த்தன. தற்போதைய நிலவரப்படி தவெக நகர்ப்புற தொகுதிகளில் 47% வாக்குகளையும், நடுத்தர நகர்ப்புற தொகுதிகளில் 37% வாக்குகளையும் பெற்றுள்ளது. இது அந்தப் பகுதிகளில் செல்வாக்கு மிக்கதாக இருந்த கட்சியின் வாக்கு வங்கியைப் பெருமளவில் பாதித்துள்ளது.
