திருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் ஏஜென்டுகள் போலீசாருடன் வாக்குவாதம்

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சென்ற போது தாங்கள் அலைக்கழிக்கப்பட்டதாக கூறி திருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏஜென்டுகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி (தனி), தாராபுரம் (தனி),உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம், பல்லடம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 8 தொகுதிகளிலும் மாவட்டம் முழுவதும் 116 பேர் போட்டியிட்டனர். இதில் திருப்பூர் வடக்கு, பல்லடம், காங்கயம் தொகுதிகளில் தலா 15 வேட்பாளர்கள், திருப்பூர் தெற்கு தொகுதியில் 24 வேட்பாளர்கள், அவினாசியில் 14, மடத்துக்குளத்தில் 13, உடுமலையில் 11, தாராபுரத்தில் 9 பேர் அடங்குவர். கடந்த 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

8 சட்டமன்ற தொகுதிகளில் 17 லட்சத்து 56 ஆயிரத்து 109 வாக்காளர்கள் வாக்களித்தனர். ஆண்கள் 8 லட்சத்து 53 ஆயிரத்து 171 பேரும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 819 பெண்களும், 119 3ம் பாலினத்தவரும் அடங்குவர். மாவட்டத்தில் 88.52 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இன்று (திங்கட்கிழமை) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கியது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு பணிக்கு இன்று காலை 7 மணி முதல் பிற கட்சிகளின் ஏஜெண்டுகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பலத்த சோதனைக்கு பின்னே போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். அவர்களிடம் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், இயர்போன் உள்ளிட்டவை இருக்கிறதா என சோதனையிட்டனர். போலீசார் நான்கு அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கிடையே வாக்கு எண்ணும் மையத்தில் நுழைவாயில் பகுதியில் அந்த ஏஜென்டுகளை போலீசார் வேறு வழியாக செல்ல அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏஜென்ட்கள் பலர் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சட்டங்களை எடுத்துரைத்தபிறகு ஏஜென்ட்கள் அங்கிருந்து சென்றனர்.

Related Stories: