சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று மிகுந்த கட்டுப்பாடுகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ், பல் மருத்துவம், சித்தா, ஆயுர் வேதா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு வெறும் 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் பயிலும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 2 கோடி ரூபாய் வரை செலவாகும் சூழல் நிலவுகிறது. இத்தேர்வு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து 180 கொள்குறி வினாக்களைக் கொண்டது. ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் நடைமுறை அமலில் உள்ளது. இத்தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.
நடப்பு 2026-27ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று (3ம் தேதி) நாடு முழுவதும் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக மொத்தம் 22.80 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இத்தேர்வு மாலை 5.20 மணி வரை என மொத்தம் 3 மணி 20 நிமிடங்கள் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட 30 நகரங்களிலும், வெளிநாடுகளில் துபாய், அபுதாபி உட்பட 14 இடங்களிலும் என மொத்தம் 552 நகரங்களில் சுமார் 5,500 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது.
தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி, புகைப்படம் ஒட்டப்பட்ட ஹால் டிக்கெட் மற்றும் ஆதார், பான் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டன. மாணவர்கள் ஒளிபுகும் தன்மையுள்ள குடிநீர் பாட்டில்களை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மத ரீதியிலான அடையாளங்களை அணிந்து வந்தவர்கள் சோதனைக்காக முன்கூட்டியே வர அறிவுறுத்தப்பட்டனர். கனமான அணிகலன்கள் மற்றும் உயரமான காலணிகளை தவிர்க்க உத்தரவிடப்பட்டது. காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மட்டுமே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 1.30 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியபடி மாணவர்கள் காலை 11 மணி முதலே மையங்களுக்கு வரத் தொடங்கினர். தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நீலம் அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாக்களை மட்டுமே மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். தேர்வு முடிந்த பின்னர் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்த பிறகே மாணவர்கள் வெளியேறினர். மருத்துவக் கனவுடன் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இத்தேர்வு நாடு முழுவதும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடத்தி முடிக்கப்பட்டது.
