புதுடெல்லி: ரயில்கள் தயாரிப்பில் 100வது வந்தே பாரத் ரயிலை தயாரித்து ரயில்வே துறை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவில் நவீன அதிவேக ரயில் சேவையை வழங்கும் நோக்கில், கடந்த 2018ம் ஆண்டில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது வெறும் 2 ரயில்களுடன் தொடங்கப்பட்ட இந்த பயணம், தற்போது ஒரு பெரும் மைல்கல்லை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் சென்னையின் ஐசிஎப் எனப்படும் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் மட்டுமே இந்த ரயில்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.
பின்னர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பஞ்சாப் மாநிலத்தின் கபுர்தலா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இடங்களிலும் ரயில் பெட்டி தயாரிப்பு பணிகள் விரிவுபடுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது 100 என்ற இலக்கை எட்டியுள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள நவீன ரயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து 100வது வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்டு நேற்று வெளியே வந்துள்ளது. இந்த 100வது ரயில் 16 பெட்டிகளைக் கொண்ட சொகுசு இருக்கை வசதியுடன் கூடிய ரயிலாகும். வழக்கமான பயணிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக, இந்த ரயில் அதன் தரம், பாதுகாப்பு மற்றும் இயக்க வேகம் குறித்த பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது.
இதில் குறிப்பாக ரயிலின் அதிர்வு மற்றும் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட இருக்கிறது. ‘முந்தைய ரயில்களை விட இந்த புதிய வந்தே பாரத் ரயில் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று ஒன்றிய ரயில்வே துறை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
