* ஐபிஎல்லில் அதிக ரன் முதலிடத்தில் அபிஷேக்
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரருக்கு ஆரஞ்ச் தொப்பி வழங்கப்பட்டு வருகிறது. அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் துவக்க வீரர் கே.எல்.ராகுல் 433 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா 425 ரன்களுடன் 2ம் இடத்திலும் ஹென்றிச் கிளாசன் 414 ரன்களுடன் 3ம் இடத்திலும் இருந்தனர். இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய அபிஷேக் சர்மா 15 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும், இந்த ரன்களுடன் சேர்த்து, அவர் குவித்த ரன் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்து ஆரஞ்ச் தொப்பிக்கான பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
* மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மார்தா சாம்பியன்
மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக் (23) அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக், ரஷ்ய வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா (19) மோதினர்.
துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய மார்தா, முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். அடுத்து நடந்த 2வது செட் போட்டியில் மிரா சற்று ஈடுகொடுத்து ஆடியபோதும், அந்த செட்டையும், 7-5 என்ற புள்ளிக் கணக்கில் மார்தா கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய மார்தா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு ரூ. 11 கோடி பரிசுத் தொகையும், வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது.
