பஞ்சாப்புக்கு எதிரான போட்டி குஜராத் வெற்றி

அகமதாபாத்: பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி வெற்றிப் பெற்றது. ஐபிஎல் தொடரின் 46வது போட்டி அகமதாபாத் நகரில் நேற்று, பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைடன்ஸ் அணிகள் இடையே நடந்தது. டாஸ் வென்ற குஜராத் பந்து வீசியது. அதையடுத்து, பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகம்மது சிராஜ், 2வது பந்தில் பிரியன்ஸ் ஆர்யா (2 ரன்), 3வது பந்தில் கூப்பர் கனோலி (0 ரன்), ஆகிய இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி அதிர்ச்சி தந்தார்.

அதையடுத்து, 6வது ஓவரை வீசிய காகிஸோ ரபாடா, பிரப்சிம்ரன் சிங்கை (15 ரன்) வீழ்த்தி அதிரடி காட்டினார். அடுத்து வந்த நேஹல் வதேரா, ஜேசன் ஹோல்டர் பந்தில் ரன் எடுக்காமல் வீழ்ந்தார். பின்னர், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை (19 ரன்) ஜேசன் ஹோல்டர் கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார். அதனால், 8.4 ஓவரில் 47 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தத்தளித்தது.

அதன் பின் இணை சேர்ந்த சூர்யன்ஸ் ஷெட்ஹே, மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த இணை, 44 பந்துகளில் 79 ரன்கள் விளாசிய நிலையில், ஷெட்கேவை (29 பந்து, 5 சிக்சர், 3 பவுண்டரி, 57 ரன்), ரபாடா வீழ்த்தினார். 18வது ஓவரை வீசிய ஹோல்டர், ஸ்டாய்னிஸ் (40 ரன்), சேவியர் பார்ட்லெட் (0 ரன்) ஆகியோரை ஆட்டமிழக்க செய்தார்.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது. குஜராத் தரப்பில், ஹோல்டர் 4, முகம்மது சிராஜ், ரபாடா தலா 2, ரஷித் கான் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து களம் இறங்கிய குஜராத் 19.5 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிப் பெற்றது.

Related Stories: