போர்ட் லாடர்டேல்: அமெரிக்காவில் நடந்த போர்ட் லாடர்டேல் ஓபன், 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கிரெட்சென் வால்ஷ், புதிய உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர்ட் லாடர்டேல் நகரில் போர்ட் லாடர்டேல் ஓபன் நீச்சல் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில், 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை கிரெட்சென் வால்ஷ், போட்டி தூரத்தை 54.33 நொடிகளில் கடந்து தனது முந்தைய உலக சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
இதற்கு முன், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போட்டிகளின்போது, 54.60 நொடிகளில் போட்டி தூரத்தை கடந்து, கிரெட்சென் வால்ஷ் உலக சாதனை படைத்திருந்தார். 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் சுவீடன் வீராங்கனை சாரா ஜோஸ்ட்ரோம், 55.48 நொடிகளில் போட்டி தூரத்தை கடந்து, சாதனை பட்டியலில் 2ம் இடம் வகித்து வருகிறார்.
