தம்பதியை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருப்பூர், பிப்.26:  திருப்பூர் பி.என்.ரோடு பூலுவபட்டியை அடுத்த கிருஷ்ணா தியேட்டர் ரோடு பகுதியை சேர்ந்தவர் தம்பதி முகமது முஸ்தபா-ஷாகிதா பானு. இவருடைய மகன் முகமது ரியாஸ் (21). இவருக்கும் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் (32) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முகமது ரியாசை பழி வாங்க நினைத்த ஜேம்ஸ் கடந்த 18ம் தேதி இரவு அவருடைய நண்பர்கள் சிலருடன் முகமது ரியாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர் வீட்டில் இல்லாததால், ஆத்திரத்தில் முகமது முஸ்தபாவையும் பானுவையும் ஜேம்ஸ், மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கணவன்-மனைவி இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருமுருகன்பூண்டி போலீசார், ஏற்கனவே பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த வினோத் (23), கார்த்தி (24), சரவணகுமார் (19), செல்வகுமார் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இதில் தொடர்புடைய பட்டுக்கோட்டையை அடுத்த கொண்டிகுளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (24) என்ற ராசுக்குட்டி என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய நபரான ஜேம்ஸ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories:

>