துருக்கியில் பதுங்கியிருந்த தாவூத் கூட்டாளி சலீம் டோலா பிடிபட்டது எப்படி?

இஸ்தான்புல்: வெளி​நாடு​களில் இருந்து பென்​டானில், ஹெரா​யின், கோகைன் ஆகிய போதை பொருட்​கள் இந்​தி​யா​வுக்கு கடத்தப்படுவதை முறியடிக்க இந்​திய போதை பொருள் தடுப்பு பிரிவு (என்​சிபி) அதி​காரி​கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு “ஆபரேஷன் குளோபல் ஹன்ட்” என்ற ரகசிய நடவடிக்​கை​யை தொடங்​கினர். இதன்​படி என்​சிபி, மும்பை காவல் துறை, குஜ​ராத் தீவிர​வாத எதிர்ப்​பு படை இணைந்து, இன்​டர்​போல் உதவி​யுடன் சர்​வ​தேச போதை கும்​பல்​களை பிடிக்க திட்டமிட்டது.

முதல்​கட்​ட​மாக உள்​நாடு, வெளி​நாடு​களில் செயல்​படும் 100-க்​கும் மேற்​பட்ட போதைப்​பொருள் கும்​பல்​களை ஒழிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டது. அதன்படி, மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்​ராகிமின் நெருங்​கிய கூட்​டாளி சலீம் டோலா துருக்​கி​யில் பதுங்​கி​யிருப்​பது தெரியவந்​தது. அவரை கைது செய்ய இன்​டர்​போல் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் ரெட் கார்​னர் நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டது. துருக்கி பாது​காப்​பு படை​யினரின் நீண்ட தேடலுக்​கு பிறகு சலீம் டோலா அண்​மை​யில் இஸ்​தான்​புல் நகரில் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர் அவர் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்​டார். கடந்த 28ம் தேதி, மும்பை நீதி​மன்​றத்தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட அவரை, மே 8-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசா​ரிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது. இதன்​பேரில் அவரிடம் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இதுதொடர்​பாக போதைப் பொருள் தடுப்​பு பிரிவு வட்​டாரங்​கள் கூறுகையில், ‘மும்​பை​யின் டோங்ரி பகு​தியை சேர்ந்த சலீம் டோலா, ஆரம்ப காலத்​தில் மும்​பை, டெல்​லி​யில் குட்கா விற்​பனை​யில் ஈடு​பட்டு வந்​தார். பின்​னர் அவருக்கு தாவூத் இப்​ராகி​முடன் தொடர்பு ஏற்​பட்​ட​பிறகு போதைப் பொருள் கடத்​தலில் ஈடு​பட தொடங்​கி​னார். அப்​போது பலமுறை போலீசிடம் பிடிபட்டார். பின்னர் வெளி​நாட்​டுக்கு தப்​பியோடி​னார். இந்​திய போதைப் பொருள் தடுப்​புப்பிரிவு அதி​காரி​கள், டோலா​வின் சர்​வ​தேச வலை​யமைப்பை கண்​டறிந்​தனர். இதைத் தொடர்ந்து துபா​யில் வசித்து வந்த டோலா​வின் மகன் தாஹீர், மரு​மகன் முஸ்​தபா ஆகியோர் கைது செய்​யப்​பட்டு இந்​தி​யா​வுக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர்.

தற்​போது துருக்​கி​யின் இஸ்​தான்​புல் நகரில் சலீம் டோலா கைது செய்​யப்​பட்​டு, இந்​தி​யா​வுக்கு கொண்டு செல்​லப்​பட்​டார். பல்​கேரியா நாட்​டின் பாஸ்​போர்ட்​டில் ஹம்சா என்ற பெயரில் டோலா தலைமறை​வாக வாழ்ந்து வந்​துள்​ளார். அவர் கைது செய்​யப்​பட்டு இருப்​ப​தன் மூலம் இந்​தியா மட்​டுமன்றி சர்​வ​தேச அளவில் போதைப் பொருள் கடத்​தல் கும்​பல்​கள் பிடிபடும்​‘ என்றன.

Related Stories: