வர்த்தக சிலிண்டர் விலையேற்றம் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்: சண்முகம் வேதனை

விருதுநகர்: வர்த்தக சிலிண்டர் விலையேற்றம் ஓட்டல் தொழில் முடங்கி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது என்று சண்முகம் வேதனை தெரிவித்து உள்ளார். மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விருதுநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று செங்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்த யுத்தத்தினால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காஸ் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. பிப்ரவரி 28ம் தேதி யுத்தம் தொடங்கியபோது வெறும் 70 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, தற்போது 126 டாலராக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3,250 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் ஓட்டல் தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களிலும் தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் அடுத்த சில நாட்களில் பெட்ரோலிய பொரு ட்களின் விலையை ஒன்றிய பாஜ அரசு கடுமையாக உயர்த்த இருக்கிறது. இவ்வளவு நாளும் உயர்த்தாமல் இருந்தது தேர்தலை கணக்கில் கொண்டுதான். கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாக இருந்த காலத்தில் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்காமல், தனது நண்பர்களை கொள்ளையடிக்க வைத்த பாஜ அரசு, இன்றைக்கு சர்வதேச நெருக்கடியால் ஏற்படும் சுமை முழுவதையும் மக்கள் தலையில் சுமத்துவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு தெரிவித்தார்.

* ‘பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்’
‘‘தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் கட்சியினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கவும் வெளியிடப்படும் கருத்து திணிப்பே ஆகும். விஜய் ஆட்சி அமைப்பார் என்று ஒரு கருத்துக்கணிப்பு வந்திருக்கிறது. இதை யாரும் ஏற்றுக்கொள்வார்களா? அவரே கூட இதை ஏற்றுக்கொள்ள மாட்டார். நிச்சயமாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்’’ என்று சண்முகம் தெரிவித்தார்.

Related Stories: