உழைப்பாளர் தினம் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்; நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதை தெரிவித்துக்கொண்டு, தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த `மே’ தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): சமத்துவமும், சமூகநீதியும் நிலைநாட்டும் நாளாக இந்த மே தினம் அமையட்டும். உழைப்பை போற்றி, உழைப்போரை உயர்த்தி சமத்துவத்தை நிலை நிறுத்துவோம். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும், மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): இந்தியாவில் நாடு விடுதலைபெற்ற பின்னர் இல்லாத அளவுக்கு நரேந்திர மோடி அரசு தொழிலாளர் வர்க்கத்தின் மீது மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. உழைக்கும் தோழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்பதோடு, மே முதல் நாள் வாழ்த்துகளை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): தொழிலாளி வர்க்கம் எனும் பெரும் படையே சுரண்டலுக்கு எதிராக ஆர்ப்பரித்து வா!, நமக்கான பொன்னுலகம் ஒன்றை நம்மால் தான் உருவாக்கிட முடியும். உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் தொழிலாளர்களுக்கு தமாகா துணை நிற்கிறது. மே தினத்தை ஒட்டி தொழிலாளர் தோழர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புமணி (பாமக தலைவர்): பாட்டாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம் என்று கூறி, உலகெங்கும் வாழும் பாட்டாளிகளுக்கு மே நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜவாஹிருல்லா (மமக தலைவர்): உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். உழைப்பாளர் தினத்தில் நாட்டை முன்னேற்றப் பாதையில் தோள்கொடுத்துத் தூக்கி நிறுத்துகின்ற உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): “உழைப்பே உயர்வு தரும்” என்ற உறுதியான நம்பிக்கையுடன், தினமும் தங்களது உழைப்பால் உலகை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் உழைப்பாளர்களின் வாழ்வில் அனைத்து வளமும் நலமும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மு.பன்னீர்செல்வம் (தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தலைவர்): அனைத்து தொழிற்சங்கங்களும் ஓரணியில் நின்று தொழிலாளர்கள் உரிமைகளை வென்று எடுத்து அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என்று இந்த மே தினத்தில் உறுதி ஏற்போம்.

Related Stories: