புதுடெல்லி: வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என்பது தேர்தல் கட்டணம் என்று பிரதமர் மோடி அரசை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஏற்கனவே வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரத்தை கடந்து ரூ.2200 முதல் ரூ. 2250 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட மே மாதத்திற்கான வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படாத நிலையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலை இதுவரை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரே நேரத்தில் ரூ.990 முதல் ரூ.1000வரை அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘விலைவாசி உயர்வு எனும் வெப்பம் தேர்தல்களுக்கு பிறகு மக்களைத் தாக்கும் என்று நான் ஏற்கனவே எச்சரித்து இருந்தேன். வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.993ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவே ஆகும். இது ஒரு தேர்தல் கட்டணம் ஆகும். அடுத்த விலைஉயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் மீது இருக்கும். சாதாரண இந்தியர்களின் துயரங்கள் மீது ஆளும் கட்சிக்கு இருக்கும் அக்கறையானது தேர்தல் கால நாடகங்களுடன் மட்டுமே முடிந்துவிடுகின்றது. அதன் பிறகு மக்கள் தங்கள் போக்கில் தனித்து விடப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால்,தேர்தல்முடிவடைந்த உடனேயே எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்துவதில் மோடி அரசு சற்றும் தாமதிக்கவில்லை\” என்று குறிப்பிட்டுள்ளார். கர்நாடக மாநிலம், கலபுராகியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘விலைகள் உயர்த்தப்படாது, பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் இன்று நான் எதார்த்த நிலையை பார்க்கிறேன். அவர் சொன்னதை அவரால் செயல்படுத்த முடியவில்லை என்றே தோன்றுகிறது. பொதுமக்களின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாட்டை இத்தகைய இக்கட்டான சூழலுக்கு தள்ளிய கொள்கைகளையோ அல்லது சித்தாந்தத்தையோ மக்கள் ஏன் இன்னும் நியாயப்படுத்துகிறார்கள்? இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது” என்றார்.
* ‘சாமானிய மக்களின் உணவு விலை அதிகரிக்கும்’
உத்தரப்பிரதேச்ததின் லக்னோவில் பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘சிலிண்டர்களுக்கு விலை உயர்வதில்லை. மாறாக உணவுகளுக்கான விலை ஏறுகிறது. உணவு பொருட்களை விலை கொடுத்து வாங்கி தாமே சமைத்து உண்பவர்களால் மட்டுமே இதனை உணர முடியும், பிறர் வீடுகளுக்கோ அல்லது உணவகங்களுக்கோ சென்று உண்பவர்களாலோ அல்லது பிறரின் தட்டுக்களில் இருந்து உணவை திருடி உண்பவர்களாலோ இதனை உணரமுடியாது” என்றார்.
* ‘பிரதமரின் மே தினப் பரிசு’
பாரத் ராஷ்ட்ரிய சமிதி தலைவர் கே டி ராமாராவ், ‘‘வர்த்தக எரிவாயு சிலிண்டர் மீதான விலை உயர்வு தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி அளித்த மே தினப் பரிசாகும். தொழிலாளர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு அவர்கள் மீது கூடுதல் நிதி நெருக்கடியை சுமத்தியுள்ளது. இந்த விலை உயர்வானது ஏழை மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத ஒரு சுமையாகும். ஒன்றிய அரசு கடுமையான இந்த உயர்வை திரும்ப பெற வேண்டும்” என்றார்.
