வழக்கு தொடர்பாக காவல் நிலையங்களுக்கு செல்பவர்களுடன் வழக்கறிஞர்கள் செல்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: காவல் நிலையங்களுக்கு வழக்காடிகளுடன் செல்லும் வழக்கறிஞர்கள் மீது காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ள விவகாரத்தில் தலையிட்டு தீர்வுகாணுமாறு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் வலியுறுத்தியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக வெற்றிபெற்றுள்ள வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ், முதல் பணியாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் வாய்மொழி உத்தரவுகளின்படி வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுடன் செல்வதற்கும், காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களுக்குச் சென்று வாதங்களை முன்வைப்பதற்கும் தடுக்கப்படுகிறார்கள். இதன்மூலம் வழக்கறிஞர்கள் தங்கள் தொழில்முறை கடமைகளைச் செய்யும்போது அவர்களை அணுகுவது மறுக்கப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோதமானதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது. வழக்கறிஞர்கள் சட்டத்தின் சட்டப்பூர்வ அதிகாரத்தை மீறும் வகையில் இந்த செயல் உள்ளது. சட்டத் தொழிலைச் செய்யும் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையைக் கட்டுப்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது. நந்தினி சட்பதி மற்றும் டி.கே. பாசு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதல்களின்படி, வழக்காடி சட்ட ஆலோசகரை அணுகுகவும், வழக்கறிஞர் ஆலோசனை வழங்கவும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுடன் காவல் நிலையங்களுக்கும், சட்ட அமலாக்க அதிகாரிகளின் அலுவலகங்களுக்கும் எவ்விதத் தடையுமின்றி உடன் செல்ல அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இந்த விஷயத்தில் தலைமை நீதிபதி தலையிட்டு தகுந்த வழிகாட்டுதல்களையோ அல்லது உத்தரவுகளையோ பிறப்பித்து வழக்கறிஞர்களின் தொழில் செய்யும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

Related Stories: