திருவனந்தபுரம்: பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் காரில் நட்சத்திர பலகையை பயன்படுத்தி வந்த கேரள மாஜி டிஜிபி டோமின் தச்சங்கரிக்கு கேரள போக்குவரத்து துறை ரூ. 250 அபராதம் விதித்தது. 1987ம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியான டோமின் தச்சங்கரி கடந்த 2023ம் ஆண்டு டிஜிபியாக இருந்த போது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகாரில் டோமின் தச்சங்கரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக டோமின் தச்சங்கரி கோட்டயம் விஜிலன்ஸ் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரது காரில் பணியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் பயன்படுத்தும் 3 நட்சத்திர பலகையை வைத்திருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய கேரள டிஜிபி ரவடா சந்திரசேகர் உத்தரவிட்டார். இந்நிலையில் டோமின் தச்சங்கரிக்கு போக்குவரத்து துறை ரூ.250 அபராதம் விதித்தது.
