திருவள்ளூர், ஏப்.30: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பனிமலர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தலைமையில், தேசிய அளவிலான முதன்மை பயிற்றுநர் சார்பாக, தேர்தல் அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 26 லட்சத்து 85 ஆயிரத்து 228 பேர் வாக்களித்தனர். அதன்படி, மொத்தம் 83.65 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது.
10 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 15 லட்சத்து 69 ஆயிரத்து 312 பேரும், பெண் வாக்காளர்கள் 16 லட்சத்து 40 ஆயிரத்து 283 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 618 பேரும் என மொத்தம் 32 லட்சத்து 10 ஆயிரத்து 213 பேர் உள்ளனர்.ஆனால், ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 17 ஆயிரத்து 908 பேரும், பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 67 ஆயிரத்து 53 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 267 பேரும் என மொத்தம் 26 லட்சத்து 85 ஆயிரத்து 228 பேர் வாக்களித்துள்ளனர். அதன்படி ஆண் வாக்காளர்கள் 83.34 சதவிகிதமும், பெண் வாக்காளர்கள் 83.34 சதவிகிதமும், மூன்றாம் பாலினத்தவர்கள் 43.20 சதவிகிதமும் என மொத்தம் 83.65 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து, 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள 4 அறைகளிலும், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெருமாள்பட்டில் உள்ள ராம் வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் உள்ள 3 அறைகளிலும், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு இயந்நிரங்கள் ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள 3 அறைகளிலும் வைத்து, சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை கண்காணிக்க முதல் அடுக்கில் மத்திய காவல் படையும், 2வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையும், 3வது அடுக்கில் மாநில காவல் படையும் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, உதவி காவல் ஆணையர் தலைமையில் 3 ஷிப்டுகளில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 24 மணி நேரமும் செவ்வாப்பேட்டை மற்றும் பெருமாள்பட்டு ஆகிய 2 மையங்களிலும் 320க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அதன்பேரில், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியில் 10 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களுக்கு தேசிய அளவிலான முதன்மை பயிற்றுநர் சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மு.பிரதாப் தலைமை தாங்கி, வாக்கு எண்ணிக்கை சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைத்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் துணை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ச.சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் டீ.ராம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
