சித்திரை பிரமோற்சவ விழாவையொட்டி வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்

திருவள்ளூர், ஏப்.29: திருவள்ளூர்  வைத்திய வீரராகவர் கோயிலில், சித்திரை பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம் விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரின் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான 59வது திவ்ய தேசமான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றவும், நோய் தீர வேண்டிக் கொள்ளவும், நோயை தீர்த்த வைத்திய வீரராகவப் பெருமாளுக்கு வேண்டுதலை நிறைவேற்றவும் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர் விழுப்புரம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, வைத்திய வீரராகவ பெருமாளை வணங்குவது வழக்கம்.

இவ்வாறு, சிறப்பு வாய்ந்த ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா, பிப்.22ம் தேதி தொடங்கி மே 1ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி காலை 4.15 மணியளவில் த்வஜாரோஹனம், சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு 5.30 மணியளவில் தங்க சப்பரம் புறப்பாடும், 11 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் சிம்ம வாகனத்தில் வீரராகவர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் வீதி புறப்பாடு நடைபெற்றது. 23ம் தேதி காலை 5 மணியளவில் ஹம்ச வாகனத்தில் வீதி புறப்பாடும், 9.30 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் சூரிய பிரபை புறப்பாடும் நடைபெற்றது.

பிறகு 24ம் தேதி காலை 4 மணியளவில் கருட சேவையும், கோபுர தரிசனமும், காலை 6 மணியளவில் வீதி புறப்பாடும், மாலை 3 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7.30 மணியளவில் அனுமந்த வாகனத்தில் வீதி புறப்பாடும் நடைபெற்றது. அதேபோல், 25ம் தேதி காலை 5 மணியளவில் சேஷ வாகனத்தில் புறப்பாடும், 10 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் சந்திர பிரபையும், 26ம் தேதி காலை 4 மணியளவில் நாச்சியார் திருக்கோலமும், 10.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் யாளி வாகனத்தில் வீதி புறப்பாடும், 27ம் தேதி காலை 5 மணியளவில் வேணுகோபாலன் திருக்கோலமும், சூர்ணாபிஷேகமும், 6 மணிக்கு வெள்ளி சப்பரமும், 10.30 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் யானை வாகனமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் விழா (28ம் தேதி) நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 5.15 மணியளவில் தேவி, பூதேவி சமேததராய் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் தேருக்கு எழுந்தருளுதலும், காலை 7:30 மணியளவில் தேர் புறப்பாடும் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து `கோவிந்தா…, கோவிந்தா…’ என்று பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் தேவி, பூதேவி சமேததரராய்  வைத்திய வீரராகவ பெருமாள் தேரிலிருந்து எழுந்தருளுதலும், திருமஞ்சனமும், இரவு 9.30 மணியளவில் சுவாமி கோயிலுக்கு எழுந்தருளும் நடைபெற்றது.

தொடர்ந்து (29ம் தேதி) இன்று காலை 9.30 மணியளவில் திருமஞ்சனமும், மாலை 3 மணியளவில் திருப்பாதம் சாடி, திருமஞ்சனமும், இரவு 7.30 மணியளவில் குதிரை வாகனமும், (30ம் தேதி) நாளை காலை 4 மணியளவில் ஆள்மேல் பல்லக்கும், காலை 10.30 மணியளவில் தீர்த்தவாரியும், இரவு 7.30 மணியளவில் விஜயகோடி விமானமும், மே1 ம் தேதி காலை 9 மணியளவில் திருமஞ்சனமும், 10.30 மணியளவில் துவாதச ஆராதனையும், இரவு 9 மணியளவில் கண்ணாடி பல்லக்கும், 11:30 மணியளவில் த்வஜ அவரோகணமும் நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் ரங்கநாதன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.

Related Stories: