திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதியை ஆதரித்து மதுரவாயலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

பூந்தமல்லி, ஏப்.21: மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதியை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். வருகிற ஏப்.23ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் வேட்பாளராக காரம்பாக்கம் கணபதி போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று வேட்பாளர் கணபதி மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் இணைந்து ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.

இந்நிலையில், வேட்பாளர் கணபதியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை மதுரவாயல் நெற்குன்றம் பட்டேல் சாலையில் திமுக வேட்பாளர் கணபதியுடன் நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலும், அவர் பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கைகள், கருத்துகளை கேட்டறிந்தார். அத்துடன் திமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு செலுத்தும் படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். வழி நெடுகிலும் திமுக தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பரப்புரையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர் முதலமைச்சருடன் நடை பயணமாக சென்றனர்.

Related Stories: