வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் பி.டெக் மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு தொடக்கம்: வேந்தர் ஜி.விசுவநாதன் நேரில் ஆய்வு

வேலூர்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் பி.டெக். பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு (VITEEE) நேற்று தொடங்கியது. தேர்வை வேந்தர் ஜி.விசுவநாதன் நேரில் ஆய்வு செய்தார். விஐடி பல்கலைக்கழகத்தில் 2026ம் கல்வியாண்டிற்கான பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு நேற்று (ஏப்.28) தொடங்கி மே 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. வேலூர் வளாகத்தில் நேற்று நடந்த நுழைவுத்தேர்வை வேந்தர் ஜி.விசுவநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி மற்றும் மாணவர் சேர்க்கை இயக்குநர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து, விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கூறியதாவது: நாடு முழுவதும் சுமார் 129 நகரங்களில் உள்ள 212 மையங்களில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

துபாய், அபுதாபி, கத்தார், மஸ்கட், பஹ்ரைன், குவைத், சிங்கப்பூர், மலேசியா, ஷார்ஜா உள்ளிட்ட 9 நாடுகளில் விஐடி நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. மே மாதம் 2வது வாரத்தில் நுழைவுத்தேர்வு முடிவுகள் www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைமுறைகள் தொடங்கப்படும். நுழைவுத்தேர்வில் தகுதி மதிப்பெண் 1 முதல் 1 லட்சம் வரை பெற்ற மாணவ, மாணவிகள் வேலூர், சென்னை, அமராவதி, போபால் ஆகிய 4 வளாகங்களில் தகுதி மதிப்பெண் அடிப்படையில் தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் தகுதி மதிப்பெண் 1 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்களுக்கு விஐடியின் ஆந்திராவில் உள்ள அமராவதி, மத்தியபிரதேசத்தில் உள்ள போபால் வளாகத்தில் மட்டுமே இடம் கிடைக்கும். மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் கலந்தாய்வில் தகுதி மதிப்பெண் 1 முதல் 20,000 வரை பெற்றவர்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வும், 20,001-45,000 வரை பெற்றவர்களுக்கு 2ம் கட்ட கலந்தாய்வும், 45,001-70,000 வரை பெற்றவர்களுக்கு 3ம் கட்ட கலந்தாய்வும், 70,001-1,00,000 வரை பெற்றவர்களுக்கு 4ம் கட்ட கலந்தாய்வும்,

தகுதி மதிப்பெண் 1 லட்சத்திற்கும் மேல் பெற்றவர்களுக்கு 5ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். அனைத்து மாணவர்களுக்கும் ஜூலை 2வது வாரத்தில் இருந்து வகுப்புகள் தொடங்க உள்ளது. இதுதவிர கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கலை அறிவியல் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: