கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் மறியல்

கிருஷ்ணகிரி, பிப்.25: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 250 பெண்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட்  அருகே அண்ணா சிலை எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கோவிந்தம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் தேவி, கவிதா, சுஜாதா, சிவகாமி, பார்வதி முன்னிலை வகித்தனர். இதில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். கவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியருக்கு ₹10 லட்சமும், உதவியாளருக்கு ₹5 லட்சமும் வழங்கிட வேண்டும் என கோஷமிட்டனர். இதனைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 250 பெண்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலை விடுவித்தனர்.

Related Stories: