மாமல்லபுரம் – கோவளம் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுற்றுலா பயணிகள் அவதி

மாமல்லபுரம், ஏப்.29: மால்லபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, நகராட்சிக்குட்பட்ட 5 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் பூஞ்சேரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் மரம் – செடி, கொடிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாமல்லபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக சில இடங்களில் ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த, ஆழ்துளை கிணறுகள் மீது மூடி போடாமல் வெறுமனே உள்ளன. இதனால் சென்னையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பயணிகள் கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக வந்து, நுழைவு பகுதியான சிற்பக்கலை தூண் அருகே இடதுபுறம் திரும்பி கோவளம் சாலை வழியாக மாமல்லபுரம் நகருக்கு உள்ளே வருகின்றனர்.

இந்நிலையில், மாமல்லபுரத்தின் முக்கிய சாலையான கோவளம் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மேனுவல் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலை முழுவதும் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் விசி வருகிறது. மேலும் இந்த சாலை வழியாக அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் நடந்து செல்பவர்கள் மீதும், அருகில உள்ள கடைகள் மீதும், அருகில் உள்ள வீடுகள் மற்றும் துர்கை அம்மன் கோயில் மீதும், அவ்வழியே நடந்து செல்லும் பாதசாரிகள் மீதும் கழிவுநீர் படுகிறது.

கிட்டதட்ட, சுமார் ஒரு மாதமாக தொடர்ந்து கழிவுநீர் வெளியேறி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சாலையின் இருபுறமும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுக்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து, கொசு பண்ணையாக மாறி இரவு நேரங்களில் வீடுகளுக்கு படையெடுப்பதால், பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டும் காணாதது போல் அலட்சியமாக செயல்பட்டு தினமும் அலுவலகத்துக்கு வந்து தூங்கி ஓய்வு எடுத்துவிட்டு செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுவதோடு, மாமல்லபுரம் சுற்றுலா நகரமா? அல்லது கழிவுநீர் நகரமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு நேரில் வந்து ஆய்வு செய்து, நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்து உடனடி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: