கையில் மை வைத்துவிட்டு ஓட்டு போடாமல் சென்ற மநீம மாநில செயலாளர்

காஞ்சிபுரம், ஏப்.25: காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிக்கு சென்று கையில் மை வைத்துவிட்டு வாக்களிக்காமல் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் திரும்பி சென்றுவிட்டார். இந்த சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளராக இருந்து வருபவர் எஸ்கேபி.கோபிநாத். காஞ்சிபுரத்தில் பட்டு விற்பனையகமும் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வாக்களிக்க காஞ்சிபுரம் தும்பவனம் தெருவில் உள்ள தங்கவேலர் நகராட்சி உயர் நிலைப்பள்ளிக்கு சென்றார்.

பின்னர், வருகையை பதிவு செய்துவிட்டு கையில் மை வைத்த பிறகு வாக்களிக்காமல் திரும்பி சென்று விட்டார். இதனால் வாக்குச்சாவடி அலுவலர், உங்கள் வாக்கை பதிவு செய்யாமல் போகிறீர்கள் என்பதற்கு அடையாளமாக ஆவணத்தில் கைவிரல் ரேகை, கையொப்பமிடவேண்டும் என கூறியுள்ளார். அதன்படி ஆவணத்தில் கைவிரல் ரேகையை பதிவு செய்தும் கையொப்பமிட்டும் வெளியில் வந்துள்ளார். இந்த சம்பவம் தேர்தல் அதிகாரிகள், மக்களிடையே அதிருப்தியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ”அரசு ஊழியர்கள் தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதியளிக்கிறது. ஆனால். தனியார் நிறுவன ஊழியர்கள் சொந்த ஊருக்கு சொந்த செலவில் சென்றுதான் வாக்களிக்கவேண்டும் என கட்டாயப்படுத்துகிறது.

இதனால் வாக்களிக்க செல்லும் தனியார் நிறுவன ஊழியர்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் முன்பதிவு செய்ய முடியாமலும், சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர். எனவே அரசு ஊழியர்களை போல தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தபால் வாக்களிக்க வாய்ப்பு தரவேண்டும் என கடந்த 6 மாதத்துக்கு முன்பே கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு தேர்தல் ஆணையம் எந்த பதிலும் தரவில்லை. எனவே எனது மனஉளைச்சலை வெளிப்படுத்த கையில் மை வைத்த பிறகு வாக்களிக்காம திரும்பிவிட்டேன். வாக்குச்சாவடி அலுவலரிடம் எனது கருத்தை தெரிவித்துள்ளேன். தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படாமல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் தபால் வாக்களிக்க வாய்ப்பு தர வேண்டும்” என்றார்.

Related Stories: