மு.க.ஸ்டாலினிடம் சக்கர நாற்காலி கேட்டவருக்கு ஓரிரு நாளில் வழங்கப்படும்

திருப்பூர், பிப்.25: தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பூர் காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில், கடந்த 21ம் தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து குறைகளை மனுக்களாக பெற்று, அவர்களுடன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற திருப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பெரிச்சிபாளையம் அண்ணமார் காலனியை சேர்ந்த ராமதாஸ் என்பவரது மகன் சபரீஷ், மாற்றுத்திறனாளியாக இருப்பதால், சக்கர நாற்காலி வசதி தேவை என கேட்டுக்கொண்டார். அதனை பெற்றுத்தருமாறு கழக தலைவர் என்னிடம் கூறினார். அதன்படி, சக்கர நாற்காலியை வாங்கி, ஓரிரு நாளில் சபரீஷ் வீட்டிற்கு சென்று வழங்க உள்ளேன். மு.க. ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருந்த அனைத்து தரப்பினருக்கும், மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>