மாமல்லபுரத்தில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் உள்ளூர் மக்கள் சுற்றுலா பயணிகள் அவதி

 

மாமல்லபுரம்: கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுவதால் மாமல்லபுரம் சுற்றுலா நகரமா? அல்லது கழிவுநீர் நகரமா? என சுற்றுலா பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மால்லபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, நகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் பூஞ்சேரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்தி கரிக்கப்பட்டு தண்ணீர் மரம், செடி, கொடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் மாமல்லபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக சில இடங்களில் ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப் பட்டுள்ளது.

ஆழ்துளை கிணறுகள் மீது மூடிபோடாமல் வெறுமனே உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சென்னையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக சென்று, நுழைவு பகுதியான சிற்பக்கலை தூண் அருகே இடதுபுறம் திரும்பி கோவளம் சாலை வழியாக மாமல்லபுரம் நகருக்கு உள்ளே வருகின்றனர்.

இந்நிலையில், மாமல்லபுரத்தின் முக்கிய சாலையான கோவளம் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மேனுவல் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பகுதி முழுவதும் துர்நாத்தம் வீசி வருகிறது. இந்த சாலை வழியாக அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் நடந்து செல்பவர்கள் மீதும், அருகில் உள்ள கடைகள், வீடுகள், துர்கை அம்மன் கோயில், நடந்து செல்லும் பாதசாரிகள் மீதும் கழிவுநீர்படுகிறது. இதனால் பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள், சாமி கும்பிட வரும் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதாக குற்றம்சாட்டுகின்றனர். மேலும் கழிவுநீரால் கொசுக்கள் அதிகரித்து இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதி காரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லையாம். மாமல்லபுரம் சுற்றுலா நகரமா? அல்லது கழிவுநீர் நகரமா? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே, இந்த பிரச்னையில் கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: