தண்டையார்பேட்டை: வடசென்னையில் பெரிய அரசு மருத்துவமனை என்றால் ஸ்டான்லி மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் சிகிச்சைக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு விபத்து பிரிவு, எலும்பு முறிவு, நீரிழிவு நோய், கை ஒட்டுறுப்பு, கல்லீரல் சிகிச்சை, இதயம், என பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காகவும் அறுவை சிகிச்சைக்காகவும் வந்து செல்கிறார்கள். இங்கு ஜெயில் கைதிகளுக்கான தனி சிறை கைதிகள் வாடும் இயங்கி வருகிறது. கடந்த 1986ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சியில் கட்டி திறக்கப்பட்ட 8 மாடி கட்டிடம்.
இந்த கட்டிடத்தில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக வார்டுகள் தனித்தனியாக உள்ளன. பழமை யான கட்டிடம் என்பதால் பழுதடைந்து வெளிப்புற சிமென்ட் கலவை பெயர்ந்து விழுந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென 8 மாடி கட்டிடத்தின் ஜன்னல் கான்கிரீட் ஸ்லாப் உடைந்து விழுந்தது. அப்போது, கட்டிடம் அருகில் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. ஆனால், கட்டிடத்தின் தரைதள பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடை மீது ஸ்லாப் விழுந்ததில் கடையின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்த 8 மாடி கட்டிடம் கொரோனா காலகட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் பராமரிப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கட்டிட மாகும். மீண்டும் ஆபத்தான நிலையில் ஸ்லாப் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்யவேண்டுமென ஸ்டான்லி மருத்துவமனை நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 40 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் இதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்பது சமூக ஆர் வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
