×

75 ரன்னில் சுருண்டது டெல்லி 6.3 ஓவரில் பெங்களூரு அபார வெற்றி

புதுடெல்லி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சிறப்பான பந்து வீச்சாலும், துவக்கத்தில் வீசிய புழுதிக் காற்றாலும் டெல்லி கேபிடல்ஸ் அணியினர், 16.3 ஓவரில் 75 ரன்னுக்கு பரிதாபமாக சுருண்டனர். பின்னர் களமிறங்கிய பெங்களூரு 6.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 39வது போட்டி டெல்லியில் நேற்று நடந்தது. அதில் டெல்லி கேபிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, டெல்லி அணியின் துவக்க வீரர்களாக ஷாஹில் பராக், கே.எல்.ராகுல் களமிறங்கினர். போட்டியின் துவக்கத்தில் புழுதிக் காற்று வீசியதால் பேட்டிங் செய்ய முடியாமல் டெல்லி வீரர்கள் திணறினர். புவனேஸ் குமார் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் ஷாஹில் ரன் எடுக்காமல் அவுட்டானார். 2வது ஓவரை வீசிய ஜோஷ் ஹசல்வுட் முதல் இரு பந்துகளில் ராகுல் (1 ரன்), சமீர் ரிஸ்வி (0 ரன்) ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாகி கலங்கடிக்கச் செய்தார்.

பின்னர் 3வது ஓவரை வீசிய புவனேஸ் குமார், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (5 ரன்), கேப்டன் அக்சர் படேல் (0 ரன்) ஆகிய இருவரை வீழ்த்தி மிரட்டினார். அடுத்த ஓவரை வீசிய ஹசல்வுட் துல்லியமாக பந்து வீசி நிதிஷ் ராணாவை (1 ரன்) அவுட்டாக்கி டெல்லி ரசிகர்களை நோகடித்தார். வெறும் 23 பந்துகளில், 8 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி செய்வதறியாது திகைத்தது. அதன் பின் இணை சேர்ந்த டேவிட் மில்லர், அபிஷேக் பொரெல் பொறுப்புடன் ஆடி 35 ரன்கள் சேர்த்த நிலையில், மில்லர் (19 ரன்) அவுட்டானார். இறுதியில், 16.3 ஓவரில் 75 ரன் மட்டுமே எடுத்து டெல்லி அணி சுருண்டது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு 6.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tags : Delhi Capitals ,Bengaluru ,New Delhi ,Royal Challengers Bangalore ,
× RELATED கொல்கத்தா பேட்டர் ரகுவன்ஷிக்கு அபராதம்