சாட்டோகிராம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நேற்று, வங்கதேசம் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி, வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. சாட்டோகிராம் நகரில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களாக கடேன் கிளார்க், டிம் ராபின்சன் களமிறங்கினர். ரிஷாத் ஹொசேன் வீசிய 2வது ஓவரில் ராபின்சன் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின் வந்த டேன் கிளீவர் 28 பந்துகளில் 51 ரன்கள் விளாசி அவுட்டானார். 12வது ஓவரில் கிளார்க் (37 பந்து, 51 ரன்) ஆட்டமிழந்தார்.
பின் வந்தோரில் கேப்டன் நிக் கெல்லி 39 ரன், ஜோஷ் கிளார்க்சன் ஆட்டமிழக்காமல் 27 ரன் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து, 6 விக்கெட் இழப்புக்க 182 ரன் எடுத்தது. அதையடுத்து, 183 ரன் இலக்குடன் வங்கதேச துவக்க வீரர்கள் சயிப் ஹசன், தன்சித் ஹசன் களமிறங்கினர். சயீப் 17, அடுத்து வந்த லிட்டன் தாஸ் 21, தன்சித் ஹசன் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தவ்ஹித் ஹிரிதோய் சிறப்பாக ஆடி 27 பந்துகளில் 51 ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 18 ஓவரில் வங்கதேசம், 4 விக்கெட் மட்டுமே இழந்து 183 ரன் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
