×

சூப்பர் ஓவரில் லக்னோவை வீழ்த்திய கேகேஆர்; 16வது ஓவருக்கு பின் ரிங்குவின் அதிரடி எல்லாவற்றையும் மாற்றியது: கேப்டன் ரகானே பாராட்டு

 

லக்னோ: ஐபிஎல் தொடரில் லக்னோவில் நேற்றிரவு நடந்த 38வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த கேகேஆர் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ரிங்குசிங் நாட் அவுட்டாக 51 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 83 ரன் அடித்தார். லக்னோ பவுலிங்கில் மொஷின்கான் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் களம் இறங்கிய லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 2, பூரன் 9, முகுல்சவுத்ரி 1, ரன்னில் வெளியேற மார்க்ரம் 31, கேப்டன் ரிஷப் பன்ட் 42, ஆயுஷ் படோனி 24 ரன் அடித்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்ட நிலையில் கார்த்திக் தியாகி வீசிய அந்த ஓவரில் முதல் 5 பந்தில் ஹிம்மத் சிங் (19 ரன்) விக்கெட்டை இழந்ததுடன் 10 ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் ஷமி சிக்சர் விளாசினார். இதனால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு லக்னோ 155 ரன் எடுக்க போட்டி டை ஆனது.

இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் ஆட்டம் நடந்தது. கேகேஆரின் சுனில் நரேன் வீசிய முதல் பந்தில் லக்னோவின் பூரன் அவுட் ஆனார். 2வது பந்தில் ரிஷப் பன்ட் ஒரு ரன் எடுக்க 3வது பந்தில் மார்கரம் கேட்ச் ஆனார். இதையடுத்து 2 ரன் இலக்குடன் கேகேஆர் களம் இறங்கிய நிலையில் பிரின்ஸ் யாதவ் வீசிய முதல்பந்தில் ரிங்குசிங் பவுண்டரி அடிக்க அந்த அணி எளிதாக வென்றது. ரிங்குசிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது வெற்றியை பெற்ற கேகேஆர் கடைசி இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியது. லக்னோ 6வது தோல்வியை சந்தித்தது.
வெற்றிக்கு பின் கேகேஆர் கேப்டன் ரகானே கூறியதாவது: இதயதுடிப்பு தற்போது தான் சீராகி உள்ளது. இந்த வெற்றியால் மிகவும் மகிழ்ச்சி.

16 ஓவருக்கு பின் நாங்கள் பேட்டிங்கில் விளையாடிய விதம், ரிங்குவின் ஆட்டம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. பாராட்டுக்கள் அவருக்கே சேரும், அற்புதமான ஆட்டம். கடைசி ஓவரில் அவர் (4 சிக்சர்) குவித்த ரன் ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தது அருமையாக இருந்தது. 160-170 ஒரு நல்ல ஸ்கோராக இருக்கும் என நினைத்தோம். பவர்பிளே எங்களுக்கு மிகவும் மோசமாக இருந்தது. அதில் தான் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். பந்துவீச்சுப் பிரிவு நன்றாகச் செயல்பட்டது. சூப்பர் ஓவரில் நரேன் தான் ஒரே தேர்வாக இருந்தார். அவர் அற்புதமாகப் பந்துவீசி வருகிறார், என்றார்.

 

Tags : KKR ,Lucknow ,Super ,Rinku ,Rahane ,Lucknow Super Giants ,Kolkata Knight Riders ,league ,IPL ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: நன்னடத்தை விதிகளை...