கடலூர் ரவுடி கொலை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் மேலும் 2 வாலிபர்கள் சரண்

விழுப்புரம், பிப். 24: கடலூர் ரவுடி கொலை வழக்கில், விழுப்புரம் கோர்ட்டில் மேலும் 2 பேர் சரணடைந்தனர். கடலூரைச் சேர்ந்த ரவுடி வீரா கடந்த 16ம் தேதி தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, வீரா கொலை வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணன் மற்றும் கூட்டாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், பண்ருட்டி அடுத்த குடிமியான்குப்பம் பகுதியில் கிருஷ்ணன் பதுங்கியிருந்துள்ளார். அவரை கைது செய்ய சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு, தப்பமுயன்றகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணன் தாக்கியதில் போலீஸ் எஸ்.ஐ. ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. கொலை வழக்கில் ஏற்கனவே 4 ேபர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 ேபரை திருப்பாதிரிபுலியூர் காவல்நிலைய போலீசார் தேடி வந்தனர். இதனிடையே, கடந்த 19ம் தேதி கடலூர், குப்பன்குளம் சிஎம்சி காலனியை சேர்ந்த சாமிநாதன்(30), ஸ்டீபன்ராஜ்(28), ஜீவா(20) ஆகிய மூன்று பேரும் விழுப்புரம் கோர்ட்டில் சரணடைந்தனர். நேற்று மேலும் குப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த விக்ரம்(28), ராக்கி(25) ஆகிய இருவரும் விழுப்புரம் 2வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் பூர்ணிமா முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories:

>