கேரளத்தில் சுட்டெரிக்கும் வெயில் பொது இடங்களில் தண்ணீர் பந்தல்: முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

திருவனந்தபுரம்: கேரளத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுவும் அதிகபட்சமாக வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியசை தாண்டாது. ஆனால் இந்த வருடம் பிப்ரவரி மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. பாலக்காடு, கண்ணூர், புனலூர், திருச்சூர் உள்பட பல்வேறு பகுதிகளில் சராசரியை விட 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரித்தது. நா பாலக்காட்டில் தான் மிக அதிகமாக 41 டிகிரி செல்ஷியசை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன் கண்ணூரில் ஒரு தொழிலாளி வெயில் கொடுமை காரணமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகரித்து வரும் வெயிலை சமாளிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டமுடிவுகள் வருமாறு:
* பொது இடங்கள், பஸ் ஸ்டாப்புகள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும்.
* அங்கன்வாடிகள், பள்ளிகளில் குளுமை தரும் கூரைகள் அமைக்க வேண்டும்.
* போக்குவரத்து சிக்னல்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வெயிலில் நீண்ட நேரம் நிற்காமல் இருக்கும் வகையில் அவர்கள் விரைந்து செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

* மூணாறு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
கேரளம் முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் நிலையில் கோடை வாசஸ்தலமான மூணாறில் மட்டுமே வெப்பநிலை ஓரளவு குறைவாக உள்ளது. இதனால் கேரளத்திலிருந்து மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மூணாறை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆனால் மூணாறு வருபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த மாவட்ட கலெக்டர் தினேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது: மூணாறில் வெப்பநிலை குறைவாக இருந்தாலும் புற ஊதா கதிர்வீச்சின் அளவு அதிகமாக உள்ளது. இதன் அளவு 8 ஆக உள்ளது. இது ஆபத்தானதாகும். எனவே பகல் நேரங்களில் வெயில் உடலில் படும் வகையில் நடமாட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: