மருத்துவமனைகளில் ஐசியு வழிகாட்டுதல்களை செயல்படுத்த திட்ட அறிக்கை: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் 3 வாரம் கெடு

புதுடெல்லி: மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுக்களுக்கு (ஐசியு) குறைந்தபட்ச தரநிலைகளை சீராக்கும் வழிகாட்டுதல்களை செயல்படுவதற்கான திட்ட அறிக்கையை 3 வாரத்தில் தயாரிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவு(ஐ.சி.யூ) அல்லது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் உட்பட சுகாதார சேவைகள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தீவிர சிகிச்சை பிரிவில் குறைந்தபட்ச தரநிலைகளை சீராக்குவதற்காக எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் பரிந்துரைத்த வழிகாட்டுதல்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்கள் குறித்து ஒருமித்த கருத்து நிலவுவதாகவும், இவை நடைமுறைக்கு உகந்தவை, செயல்படுத்தக் கூடியவை மற்றும் ஐசியுவுக்கு தேவையான குறைந்தபட்ச தரநிலையாக அமைபவை என நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழிகாட்டுதல்களின் நகல்கள் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அது, ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்திலும் பதிவேற்றப்பட வேண்டும்.

அதைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக மாநில அரசுகளின் சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வித்துறையை வழிநடத்தும் அனைத்து கூடுதல் தலைமை செயலாளர்கள், துறைத்தலைவர்கள் நிபுணர்களுடன் கூட்டத்தை நடத்தி இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை 3 வாரத்திற்குள் தயாரிக்க வேண்டும். அந்த அறிக்கை எதார்த்தமானதாகவும் நடைமுறைக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை வரும் மே 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories: