பவன் கேரா விவகாரத்தில் அச்சுறுத்தல், துன்புறுத்தல் அரசியலுக்கு எதிராக நீதி வெல்லும்: காங். எம்பி ஜெய்ராம் ரமேஷ் கருத்து

புதுடெல்லி: பவன் கேரா விவகாரத்தில் அச்சுறுத்தல், மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் அரசியலில் உச்ச நீதிமன்றத்திடம் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பதில் காங்கிரஸ் நம்பிக்கையுடன் இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் கூறினார். அசாம் பாஜ முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயானுக்கு பல நாட்டு பாஸ்போர்ட்கள் மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் இருப்பதாகவும், அவை தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் கடந்த 5ம் தேதி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை முதல்வர் சர்மா அவரது மனைவி ரினிகி புயான் மறுத்தனர். இந்த விவகாரத்தில் போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாக அசாம் அரசு குற்றம் சாட்டியது.

பவன் கேரா மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், தெலங்கானா உயர்நீதிமன்றம் பவன் கேராவுக்கு ஒரு வாரம் முன்ஜாமீன் வழங்கியிருந்தது. அசாம் போலீசார் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு அவர் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தை நாடினார்.பவன் கேரா முன்ஜாமீன் மனு கோரி கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த கவுகாத்தி உயர்நீதிமன்றம் பவன் கேராவின் மனுவை நேற்று தள்ளுபடி செய்தது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், அச்சுறுத்தல், மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் அரசியல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திடம் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பதில் காங்கிரஸ் நம்பிக்கையுடன் இருக்கிறது. அவருக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: