புதுடெல்லி: நிதி ஆயோக் துணைத்தலைவராக மேற்கு வங்க பாஜ எம்எல்ஏ அசோக்குமார் லஹிரி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் 5 நிரந்தர உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுக்கவும், ஒன்றிய அரசுக்கு கொள்கை ஆலோசனைகளை வழங்கவும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஆக்கப்பூர்வமான உறவை வளர்க்கவும் நிதி ஆயோக் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். கடந்த 2022ல் துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட சுமன் பெரியின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ளது.
இந்நிலையில், நிதி ஆயோக் அமைப்பின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி துணைத்தலைவராக அசோக் குமார் லஹிரியும், 5 நிரந்தர உறுப்பினர்களாக விஞ்ஞானி கோபர்தன் தாஸ், முன்னாள் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, பொருளாதார நிபுணர் கே.வி.ராஜு, தொழில்நுட்பத் துறை செயலாளர் அபய கரண்டிகர், எய்ம்ஸ் இயக்குநர் எம்.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் துணைத்தலைவர் லஹிரி மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லஹிரி தற்போது மேற்கு வங்க மாநில பலூர்காட் தொகுதி பாஜ எம்எல்ஏவாக உள்ளார். இம்முறை சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. மேலும், 15வது நிதிக்குழுவின் உறுப்பினராகவும் ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிலும் பணியாற்றி மூத்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவராக லஹிரி திகழ்வதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த லஹிரி டெல்லி பொருளாதார பள்ளியிலும், பிரசிடென்சி பல்கலைக்கழகத்திலும் படித்துள்ளார்.
* பிரதமருக்கு நன்றி
நிதி ஆயோக் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அசோக்குமார் லஹிரி நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். லஹிரி தனது எக்ஸ் பதிவில், ‘‘இன்று என் வாழ்வில் மிக முக்கியமான நாள். மேற்கு வங்கத்தின் தொலைதூர கிராமத்தை சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த, சாதாரண விவசாய குடும்பத்தின் மகன் நான். சிறுவயது முதலே மண் வாசனை, கடின உழைப்பின் மதிப்பு மற்றும் போராட்டத்தின் உண்மை ஆகியவை என் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கங்களாக இருந்து வருகின்றன. எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்பு, வெறும் பதவி மட்டுமல்ல. என்னைப் போன்ற எண்ணற்ற சாதாரண மக்களின் கனவுகள், நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களின் பிரதிபலிப்பாகும்’’ என கூறி உள்ளார்.
