மே.வங்க முதல்வராக மம்தா மீண்டும் பதவி ஏற்பார்: தேஜஸ்வி யாதவ் உறுதி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 142 பேரவை தொகுதிகளுக்கு வரும் 29ம் தேதி இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை வீழ்த்தி, ஆட்சியை பிடிக்க பாஜ திட்டமிட்டுள்ளது. அதேசமயம் ஆட்சியை தக்க வைத்து கொள்ள மம்தா பானர்ஜி தீவிர பிராசரம் செய்து வருகிறார். இந்நிலையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஜகதால், பட்பரா மற்றும் கர்தாஹா ஆகிய பேரவை தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் தன் எக்ஸ் பதிவில், “வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாரக்பூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட பட்பரா பேரவை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அமித் குப்தா மற்றும் ஜனதால் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் சோம்நாத் ஷியாம் ஆகியோரை ஆதரித்து உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் ரோடு ஷோ நடத்தப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

இதேபோல், கர்தாஹா தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் தேவதீப் புரோகித்தை ஆதரித்து வாக்கு சேகரித்த தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மேற்குவங்க மக்களின் அசைக்க முடியாத அன்பு, உறுதியான நம்பிக்கை மற்றும் அமோக ஆதரவு ஆகியவை, பெரும்பான்மை பலத்துடன் ஆசிர்வதித்து, மம்தா பானர்ஜியை தொடர்ந்து 4ம் முறை முதல்வராக்க மக்கள் உறுதிபூண்டுள்ளனர்” என்று கூறினார்.

* பயத்தால் பாஜவில் சேர்ந்த ஆம்ஆத்மி எம்.பிக்கள்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் பாஜவில் சேர்ந்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், “சிலர் சமரசம் செய்து கொள்கிறார்கள். பயத்தாலோ, பேராசையாலோ பாஜவில் சேர்ந்திருக்க வேண்டும்” என்றார்.

Related Stories: