சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் 9 போலீசாரின் மரண தண்டனையை உறுதி செய்ய ஐகோர்ட்டில் சிபிஐ மனு

 

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், அதே ஊர் பஜாரில் செல்போன் கடை வைத்திருந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில், விதிமுறைகளை மீறி கடையை அதிக நேரம் திறந்து வைத்ததாக, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ கொலை வழக்காக மாற்றி, ஆய்வாளர் தர் உட்பட 9 போலீசாரை கைது செய்தனர். அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த ஏப்.6ம் தேதி, 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், மாவட்டம் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதிப்படுத்த கோரி, சிபிஐ தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சிறையில் உள்ள 9 குற்றவாளிகளும் காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர். முதல் குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் தர் தானே நேரில் ஆஜராகி வாதாட விரும்புவதாக தெரிவித்தார்.

இதையடுத்து ‘முதலில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுங்கள்’ என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது, தர் எங்களுக்கு உரிய ஆவணங்கள் வழங்கவில்லை என நீதிபதியிடம் முறையிட்டார்.இதையடுத்து, உத்தரவு நகலை வைத்து முதலில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுங்கள். பின்பு உரிய ஆவணங்கள் வழங்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதி ஒத்தி வைத்தனர்.

 

Related Stories: