நன்றி குங்குமம் தோழி
வேணில் சக்க… வேரிலும் காய்க்கும்!
முக்கனிகளில் முக்கிய கனி, பழம்பெரும் கனி, சுவையும் மணமும் கொண்ட கனி என சொல்லப்பட்டாலும், அதிகளவிலான கலோரிகள் இருப்பதால் சர்க்கரை நோய், உடற்பருமன் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய கனி என்பதே பலா குறித்த நமது புரிதல்.வெளித் தோற்றத்தில் கரடுமுரடாகவும், உள்ளே அமைதியாகவும் இருக்கும் மனிதர்களோடு ஒப்பிடப்படும் பலா, கேரள மன்னர் சக்தன் தம்பூரானின் விருந்தோம்பலில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
‘வேணில் சக்க… வேரிலும் காய்க்கும்..!’ அதாவது, கிளையில் மட்டுமல்ல, வேரிலும் காய்க்கும். ‘விடா முயற்சி உடையவர்கள் வெற்றி அடைவார்கள்’ என பலா குறித்த மலையாளப் பழமொழியை உண்மையாக்கி உள்ளார் ஜோசப் எனும் கேரளப் பொறியாளர், பலா குறித்த அவரின் ஆராய்ச்சி வழியாக. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த அவர் பரிந்துரைப்பதும் இதே பலாவைத்தான். எப்படி என்பதை, பலா குறித்த முழுமையானத் தகவல்களுடன் தெரிந்துகொள்வோம்.
ஜாக், ஜக்கா, ஜாக்வெய்ரா, நாங்கா, பனஸ், பனஸா, காத்தல் என பலவாறு அழைக்கப்படும் பலாவின்(Jackfruit) தாவரப்பெயர் Artocarpus heterophyllus. தோன்றிய இடம் இந்தியா, குறிப்பாக கேரளம். ‘சக்கப்பழம்’ என்ற மலையாள மொழியிலிருந்து போர்ச்சுக்கீசிய மொழியில், ‘Jaca’ என அழைக்கப்பட்டு, பின்பு அதுவே ‘Jack Fruit’ ஆனது. ஏகாரவல்லி, சக்கை, பலவு, பலாசம், வருக்கை, பனசம் முதலிய தமிழ் பெயர்களும் பலாவிற்கு உண்டு. இதன் சிறந்த குணங்களால், ‘The King of Fruits.!’ என மேற்கத்திய நாடுகளில் போற்றப்படுகிறது.
மரத்தின் அடிப்பகுதி அல்லது கிளைகளில் கனியும் பலா ஏறத்தாழ 5 முதல் 10 கிலோவரை எடை கொண்டவை. வெளியில் முட்கள் நிறைந்த இந்தப் பழத்தின் உள்ளே, அதிக நார்களால் சூழப்பட்டு, அதன் தடிமனான தோலுக்கு அடியில் சுவையும், மணமும் மிகுந்த மஞ்சள் நிற சுளைகள், கண்கவர் மஞ்சள் வண்ணத்தில், அதிக மணமுடன் ஈர்க்கும்.
கோடை காலத்தில் அதிகம் விளைச்சல் கொண்ட இவை, கூழப்பலா, கறிப்பலா, தேன்பலா, ஆசினிப்பலா எனவும் வகைப்படுத்தப்படுகிறது. சிவந்த நிற சுளைகள் கொண்ட தாய்லாந்து வகையும், மிக இனிப்பான வியட்நாம் வகையும் பலாவில் உண்டு. சிறிய நார்கள் கொண்ட கூழாசக்கா, விற்பனைக்கு ஏற்றது என்றால், கறிப்பலா எனும் இளம்காய் சமைக்க பயன்படுத்தும்போது, இறைச்சிக்கு இணையாக சுவை கொடுப்பதால், ‘Tree mutton’ என்றே அழைக்கப்படுகிறது.
பலாவின் காய், கனி, விதை என அனைத்தும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. பலாச் சுளைகளில் உள்ள அதிக அளவிலான கலோரிகள், குறிப்பாக ஃப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ்கள் உடனடி ஆற்றலுக்குக் காரணமாகின்றன. இதிலுள்ள அதிக நார்ச்சத்து, அதிக நீர்த்தன்மை, தேவையான புரதச்சத்து, குறைந்த கொழுப்பு மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களான A, C, B ஆகியனவும், கால்சியம், பாஸ்ஃபரஸ், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம் உள்ளிட்ட கனிமச் சேர்மங்களும், க்ரிப்டோ-ஸாந்தின், ஸாந்தின், லூட்டீன், லிக்னான்கள், சப்போனின்கள், கரோட்டினாய்டுகள் போன்ற தாவரச் சத்துகளும் மருத்துவக் குணங்களுக்கு காரணமாக இருக்கின்றன.
இதனால் பலாப்பழம் பல உடனடி ஆற்றலை அளிப்பது மட்டுமன்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஞாபகத் திறனைக் கூட்டி, தூக்கமின்மையைப் போக்குகிறது. சரும அழகினை கூடுதலாக்குவதுடன், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், ரத்த சோகை, மலச்சிக்கல், ஆஸ்துமா, நாட்பட்ட நுரையீரல் நோய்களுக்கு பயனளிக்கிறது. வயோதிக நோய்களான கண் நோய், தோல் அழற்சி, தோல் சுருக்கங்கள், எலும்பு புரை, மூட்டு வீக்கத்தை தடுக்கவும் பலா உதவுவதுடன், பெருங்குடல், கர்ப்பப்பை, சினைப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய்களுக்கு எதிரான மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதிலுள்ள லிக்னான்கள், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் பயனைத் தருவதால் மாதவிடாய் பிரச்னைகள், பிஎம்எஸ் (PMS), மெனோபாஸ் போன்ற பிரச்னைகளுக்கு பயனளிப்பதுடன், தைராய்டு சுரப்பையும் சீராக்குகிறது.பலாப் பழத்தின் காய்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதுடன், பித்தம், வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு பிரச்னைகளை குணமாக்கும் ஆற்றல் கொண்டவை. காய் கனி தவிர்த்து, சுளைகளுக்குள் இருக்கும் கொட்டைகளிலும் புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இதுவும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
பலாவை அதிக அளவில் உட்கொள்ளும்போது வாந்தி, வயிற்று அழற்சி, செரிமானமின்மை பிரச்னைகள் ஏற்படக்கூடும். பழுத்த பலாவில் உள்ள அதிக கலோரிகள், சர்க்கரை நோய்க்கு ஏற்புடையதல்ல என்பதைப் போலவே, இதிலுள்ள கூடுதல் பொட்டாசியம் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு தீமைகளை உண்டாக்கக்கூடும் என்பதையும், பலாவின் வெளிப்புற மரப்பிசின் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
பலாப்பழத்தை பயன்படுத்தி பலவகை இனிப்பு பண்டங்கள், சிப்ஸ் தயாரிப்பதைப் போல, தேனில் ஊற வைத்து உட்கொள்ளப்படும் பலாவை கூழ், கீர், ஜாம், ஜெல்லி, ஐஸ்கிரீம் தயாரித்தும் உட்கொள்ளலாம். மதுபான தயாரிப்பிலும் இதன் பழரசம் பயன்படுத்தப்படுகிறது. சிறிய வடிவிலான பலாக்காய்கள், அதன் நார்த்தன்மை காரணமாக இறைச்சிக்கு ஈடாக சைவ உணவாக பயன்படுத்தப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது பண்பாட்டுடன் இயைந்த இந்த பலா, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, குற்றாலக் குறவஞ்சி போன்ற இலக்கிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. மேற்கிந்திய மலைத்தொடரில் குறிப்பாக கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்களில் அதிகம் காணப்படுவதுடன், இலங்கை, இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, ஃபிலிப்பைன்ஸ் நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. பங்களாதேஷ் நாட்டின் தேசியக் கனியாகவும் பலா திகழ்கிறது.
பலாப்பழ உற்பத்தியில் இந்தியாதான் உலகளவில் முதலிடம் என்றால், கொள்முதலில் சீனா முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் பண்ருட்டி பலா தனிச்சிறப்பு மிக்க ஒன்றாக போற்றப்படுகிறது. உகந்த சூழலில், விதைகளிலிருந்து வளர்க்கப்படும் பலா மரங்கள், முதல் காயை கொடுக்க 3 முதல் 4 வருடங்கள் எடுக்கும் என்றாலும், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு காய்க்கும் திறன் மிக்கவை.
எல்லாம் சரி… ஆனால், பழுக்காத பலாக்காய்களில் மிகக் குறைந்த கலோரிகளும், அதிக அளவிலான நார்ச்சத்தும், உடனடி ஆற்றலைக் கூட்டாத மாவுச் சத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்புடையது என்பதுடன், தேவையான இன்சுலின் சுரப்பை பச்சைப் பலா அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பச்சைப் பலாவிலிருந்து, freeze drying technology வாயிலாக எதிலும் கலக்கக்கூடிய, சுவை மற்றும் மணமற்ற சமநிலை மாவைத் தயாரித்துள்ள ஜோசப் எனும் மென்பொறியாளரின் தயாரிப்புதான், இப்போது பரவலாக இட்லி, தோசை மாவுடனும், சப்பாத்தி மாவுடனும் பயன்படுத்தப்படுகிறது.ஒருநாளில் முப்பது கிராம் எனும் அளவில், பச்சை பலாவின் மாவு உணவில் பயன்படுத்தப்படும்போது, சர்க்கரை நோயாளர்களுக்கு, ஃபாஸ்டிங் மற்றும் உணவிற்குப் பின்னான சர்க்கரை அளவுகளும், குறிப்பாக HbA1c எனும் மூன்று மாத சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆக, ‘கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே இந்த வேரில் பழுத்த பலா’ என்ற பாரதிதாசன் வரிகளின் உண்மையை உணர்ந்து, என்னை இனி நீங்கள் ஒதுக்க வேண்டாம் என்றே ‘வேணில் சக்க’ நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே ஆரோக்கியம் தரும் பலாவினை நாம் ஏற்போம்.!!
(இயற்கைப் பயணம் நீளும்!)
