×

தாயாரை இழந்த 2நாளில் கடினமான சூழலில் ஆடிய முகேஷ் சவுத்ரிக்கு தான் அனைத்து பாராட்டுக்களும் சேரும்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி

 

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 33வது லீக் போட்டியில் 5 முறை முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் நாட் அவுட்டாக 54 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் 101 ரன் விளாசினார். கேப்டன் ருதுராஜ் 22, டெவால்ட் பிரெவிஸ் 21 ரன் அடித்தனர். மும்பை பவுலிங்கில் கசன்ஃபர், அஸ்வினி குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 208 ரன் இலக்கை துரத்திய மும்பை அணியில் டேனிஷ் மாலேவார், நமன் திர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் டக் அவுட்டாக சூர்யகுமார் 35, திலக்வர்மா 37 ரன் எடுக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர்.

19 ஓவரில் 104 ரன்னுக்கு மும்பை ஆல்அவுட் ஆனது. இதனால் 103 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றிபெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் அகீல் ஹொசைன் 4, நூர் அகமது 2 விக்கெட் வீழ்த்தினர். சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார். 7வது போட்டியில் சிஎஸ்கே 3வது வெற்றியை பெற்றது. மும்பை 5வது தோல்வியை சந்தித்தது.
வெற்றிக்கு பின் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: முகேஷ் சவுத்ரி தாயாரை இழந்த 2 நாட்களில் கடினமான சூழலில் தான் விளையாடினார். அவருக்கு நான் தலை வணங்குகிறேன். இதுபோன்ற சூழலில் ஆடுவது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அணிக்கு அவர் தேவைப்படுவார் என்பதை உணர்ந்து திரும்பினார்.

அனைத்து பாராட்டுக்களும் அவருக்கு தான் சேரும். எப்போதெல்லாம் எங்களுக்கு அவருடைய பங்களிப்பு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவர் எங்களுடன் இருந்தார். இந்த ஆடுகளத்தில் 200 ரன்னுக்கு மேல் குவித்தாலே போதுமானது என்று நினைத்தோம். அதேபோன்று பந்துவீச்சில் அகில் ஹூசேனும் நூர்அகமதும் சிறப்பாக செயல்பட்டனர். சாம்சன் மிகச் சிறப்பான இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார். அணியில் ஒவ்வொருவரும் தங்களுடைய பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து ஆடுகிறார்கள், என்றார்.

 

Tags : Mukesh Chaudhary ,CSK ,Ruturaj ,Mumbai ,Mumbai Indians ,Chennai Super Kings ,IPL ,Wankhede Stadium ,
× RELATED ஐபிஎல்லில் இருந்து விலகிய பென்...